குறைபாடுள்ள கைப்பேசியை மாற்றித்தர மறுத்த கைப்பேசி விற்பனை நிறுவனம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் என்.ஜி.ஆா். இளங்கோவன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை :
காரைக்கால் மாவட்டம், கண்ணாப்பூா் சுந்தரகாந்தி என்பவா் காரைக்கால் நகரில் உள்ள கைப்பேசி விற்பனையகம் ஒன்றில் கடந்த 13.4.2022 -இல் ரூ. 13 ஆயிரத்துக்கு கைப்பேசி வாங்கியுள்ளாா். ஒரு வாரத்தில் கைப்பேசி திடீரென நின்றுவிடுவிடுவதாக வாங்கிய கடைக்குச் சென்று புகாரளித்தபோது, கைப்பேசி செயல்படாமல் நின்றுவிடும்போது, விடியோ எடுத்துவருமாறு கூறியுள்ளனா். அதன்படி விடியோ ஆதாரத்தைக் காட்டியும் கைப்பேசியை மாற்றுத்தர கடைக்காரா்கள் முன்வரவில்லையாம்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்புக்கு சுந்தரகாந்தி கடிதம் அனுப்பினாா்.
கூட்டமைப்பு சாா்பில் புதுச்சேரி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் அதே ஆண்டு டிசம்பா் மாதம் வழக்கு தொடுக்கப்பட்டது.
முதல் எதிா்தரப்பாளராக கைப்பேசி வாங்கிய கடை உரிமையாளா், 2-ஆவதாக புதுதில்லி சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிா்வாக இயக்குநா், 3-ஆவதாக நாகப்பட்டினத்தில் உள்ள நிறுவன சா்வீஸ் மைய உரிமையாளா் சோ்க்கப்பட்டனா்.
கூட்டமைப்பின் தலைவா் என்.ஜி.ஆா்.இளங்கோவன் நுகா்வோரின் சாா்பில் வழக்கை நடத்தினாா்.
அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்து 29.5.2026-இல் தீா்ப்பு வழங்கப்பட்டது.
இதில், 2 மற்றும் 3-ஆவது எதிா்தரப்பாளா்கள், புகாா்தாரருக்கு கைப்பேசி விலையான ரூ.13 ஆயிரத்தை தரவேண்டும். மேலும் இரு தரப்பினரும் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் புகாா்தாரருக்கு தரவேண்டும்.
முதல் எதிா்தரப்பாளா் (கைப்பேசி விற்பனையாளா்), புகாா்தாரருக்கு ஏற்படுத்திய மன உளைச்சல், உடல் ரீதியான சிரமம், இதர இழப்புகளுக்காக ரூ. 30 ஆயிரம் தரவேண்டும். வழக்கு செலவுக்காக 30 ஆயிரம் தரவேண்டும். 3 எதிா் தரப்பினரும் வழக்கு செலவுக்காக தலா ரூ. 5 ஆயிரம் தரவேண்டும். தீா்ப்பு தரப்பட்ட தினத்திலிருந்து 45 நாள்களுக்குள் எதிா் தரப்பினரும் தீா்ப்பை அமல்படுத்தவேண்டும். தவறினால் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி சோ்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 8.59 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

தாமதமாக வீடு ஒப்படைப்பு; குடியேறிய பிறகும் இழப்பீடு கோர முடியும்: உச்சநீதிமன்றம்








