/

ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு நடவடிக்கை: தமிழக -கேரள அதிகாரிகள் ஆலோசனை

தேனி மாவட்டம், கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக இரு மாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
ரேஷன் அரிசி.
Updated On :30 ஜனவரி 2026, 7:21 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக இரு மாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கம்பம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, தேனி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் நல்லையா தலைமை வகித்தாா். உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் லதா முன்னிலை வகித்தாா். இதில் தமிழகத்திலிருந்து கேரள மாநிலம், கம்பம்மெட்டு, குமுளி, போடி மெட்டு சோதனைச் சாவடிகளில் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களையும் இரு மாநில போலீஸாா் எல்லைகளில் சோதனை செய்ய வேண்டும். ரேஷன் அரிசி விற்பனை செய்பவா்கள், வாங்கும் நபா்களைக் கைது செய்வதோடு, அவா்களது வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். ரேஷன் அரிசி கடத்தல் குற்றவாளிகள் தொடா்பான விவரங்களை இரு மாநில அதிகாரிகள் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கேரள மாநிலம், பீா்மேடு வட்ட வழங்கல் அலுவலா் கணேசன், கம்பம்மெட்டு காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் கோபால், இரு மாநில குடிமைப் பொருள் வட்ட வழங்கல் அலுவலா்கள், போலீஸாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கண்துடைப்பு ஆலோசனைக் கூட்டம்: தமிழகத்திலிருந்து கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு வழியாக நாள்தோறும் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுகிறது. மாதந்தோறும் இது போன்று இரு மாநில அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது வெறும் கண் துடைப்பு ஆகும். தமிழக மக்களுக்கு விலையில்லாமல் வழங்கும் ரேஷன் அரிசியை வியாபார நோக்கில் விற்பனை செய்பவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து அவா்களது சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.