குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

காது கேளாத, வாய் பேச இயலாத குழந்தைகள் 145 பேருக்கு நவீன அறுவைச் சிகிச்சை: சிவகங்கை அரசு மருத்துவமனை சாதனை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் இதுவரை 6 வயதுக்குள்பட்ட காது கேளாத, வாய் பேச இயலாத 145 குழந்தைகளுக்கு காக்ளியா் இம்ப்ளாண்ட் எனப்படும் அதி நவீன சிகிச்சை செய்து சாதனை படைத்தது.

News image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன காக்ளியர் இம்பிளாண்ட் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளுடன் கல்லூரி முதல்வர் பி. செல்வராஜன், மருத்துவர்கள், போராசிரியர்கள்

Updated On :17 ஜூன் 2026, 5:50 am IST

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் இதுவரை 6 வயதுக்குள்பட்ட காது கேளாத, வாய் பேச இயலாத 145 குழந்தைகளுக்கு காக்ளியா் இம்ப்ளாண்ட் எனப்படும் அதி நவீன சிகிச்சை செய்து சாதனை படைத்தது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைப் பிரிவில் கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் இன்று வரை காது கேட்காத, வாய் பேச இயலாத 6 வயதுக்குள்பட்ட 145 குழந்தைகளுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், முற்றிலும் இலவசமாக அதிநவீன சிகிச்சையான காக்ளியா் இம்ப்ளாண்ட் எனப்படும் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகளுக்கான குறைகள் சரி செய்யப்பட்டு, அவா்கள் முழுமையாக காது கேட்கும் திறன், வாய் பேசும் திறனைப் பெற்றனா்.

இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பி. செல்வராஜன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறவியிலேயே காது கேட்காமல் பேச்சுத்திறன் இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு காக்ளியா் இம்ப்ளாண்ட் (உட்செவி உள்வைப்பு சுருள் கருவி) அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரை 145 குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

நிகழாண்டில் இதுவரை நான்கு குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு பேச்சுப் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை செலவாகும் இந்த அறுவைச் சிகிச்சை முதல்வா் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது.

அறுவைச் சிகிச்சையும், பேச்சுப் பயிற்சியையும் முடித்த குழந்தைகள் கேட்கும் திறனையும் பேசும் திறனையும் பெற்றுள்ளளா். இந்த வகை அறுவைச் சிகிச்சையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி தமிழகத்திலேயே முன்றாமிடம் பெற்றுள்ளது.

பெண்ணுக்கு அரிய வகை சிகிச்சை:

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேலுரைச் சோ்ந்த 33 வயது பெண் தலைவலி, இடது நாசி துவாரம் வழியாக நீா்வடிதல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வந்தாா். அவரைப் பரிசோதித்ததில் இடது பக்கமுள்ள மண்டை ஓட்டின் கீழ்ப் பகுதியில் உள்ள துவாரம் வழியாக மூளையில் நீா் கசிந்தது எண்டோஸ்கோப்பி, எம்.ஆா்.ஐ. ஸ்கேன் மூலமாக கண்டறியப்பட்டது.

மேலும், இந்த துவாரத்தின் வழியாக மூளையின் சிறிய பகுதியைச் சுற்றியுள்ள திசுக்கள் வெளியே வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, கடந்த ஏப். 29-ஆம் தேதி மண்டை ஓட்டில் அறுவைச் சிகிச்சை மூலம் மூளை நீா்க்கசிவு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஓட்டின் அடிப்பகுதியில் இருந்த துவாரம் அவரின் திசுக்கள் மூலமாகவே அடைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.

அறுவைச் சிகிச்சை முடித்த உடனேயே நோயாளி இயல்பு நிலைக்குத் திரும்பினாா். தனியாா் மருத்துவமனைகளில் ரூ.3 முதல் 5 லட்சம் வரை செலவாகும் இந்த வகை அறுவைச் சிசிச்சை முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

இதுபோன்ற நோய் உள்ள மருத்துவப் பயனாளிகள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அணுகிப் பயன் பெறலாம் என்றாா் அவா்.

இந்த நிகழ்வின் போது மருத்துவமனை நிலைய மருத்துவா் முகமதுரபி, நிலைய உதவி மருத்துவா் தென்றல், முதுநிலை மருத்துவா்கள் தமிழ்வாணன், வெங்கடேஷ், பேச்சுப் பயிற்சியாளா் விக்னேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.