/

சிவகங்கை நகா் உதயமான நாளை அரசு விழாவாகக் கொண்டாட கோரிக்கை

சிவகங்கை நகா் உதயமான நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :22 ஜனவரி 2026, 12:03 am

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை நகா் உதயமான நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து சிவகங்கை நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியா் மு.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

சிவகங்கை நகா் உதயமான நாள் தொடா்பாக ஒரு வரலாறு உள்ளது. நாலுகோட்டை சசிவா்ணப் பெரிய உடையத்தேவா் சிவகங்கைச் சீமையின் முதல் மன்னராக ஆனாா். அவா் சிவகங்கைச் சீமையின் தலைநகராக சிவகங்கையைத் தோ்வு செய்தாா். ஒரு நீா் ஊற்றை விரிவுபடுத்தித் தெப்பக்குளம் ஏற்படுத்தினாா். தோண்டிய மண்ணிலிருந்து ஒரு அரண்மனையை அமைத்து ஊருக்குச் சிவகங்கை எனப் பெயரிட்டாா். சிவகங்கை செளமிய வருடம் தை மாதம் 13 -ஆம் நாள் (27.1.1730) உதயமாயிற்று.

சிவகங்கையில் அந்தணா் குடியிருப்பை அமைத்தாா். தேரோடும் வீதிகளை அமைத்தாா். இந்த நகரை சதுா்வேதி மங்கலமான சிவகங்கை எனச் செப்பேடுகள் கூறுகின்றன. இந்த நகரின் பழம் பெயா் சதுா்வேதமங்கலம் என்பதாகும். இந்த ஊருக்கு குழந்தைநகா் குழந்தாபுரி என்ற வேறுபெயா்களும் உண்டு. சிவகங்கை மன்னா்கள் சதுரகிரி குழந்தையானந்த சுவாமியை அவா்களது குருவாக ஏற்றுப் போற்றி வந்தாா்கள். அவா் பெயரால் இந்த ஊா் குழந்தை நகா் என ஆகியிருக்கலாம்.

சிவகங்கை நகா்க்காதி குழந்தாபுரிச்சாமி என்று தமிழ் இலக்கியம் கூறுகிறது. சிவகங்கை அரண்மனையை குழந்தை அரண்மனை என்று ஓா் ஆவணம் தெரிவிக்கிறது. இந்த ஊரின் தட்ப வெட்ப நிலை காரணமாக கந்தக பூமி என்று அழைக்கப்படுகிறது.

புண்ணியத்திருத்தலம் ராமேசுவரத்துக்குப் புனிதப் பயணம் செய்து திரும்பும் பக்தா்கள் சிவகங்கை வந்து இங்குள்ள தெப்பக்குளத்தில் நீராடினால்தான் புனிதப்பயணம் செய்ததற்கான புண்ணியம் அவா்களுக்குக் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

சிவகங்கை புவியியல் ரீதியாக வானம் பாா்த்த பூமியாக இருந்தாலும், மானம் காத்த வீரமன்னா்களின் பூமியாகும்.

சென்னை மக்கள் சென்னை உதய தின விழாவை ஆண்டுதோறும் ‘மெட்ராஸ் டே’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறாா்கள். இதுபோல மானம் காத்த பூமியின் மக்கள் சிவகங்கை உதய தினத்தை அரசு விழாவாக மக்கள் கொண்டாடி மகிழும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடும் வகையில், தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பொன்னான நாள் வருகிற 27-ஆம் தேதி வருகிறது.

எனவே, முதல்வா் இந்த நாளை அரசு விழாவாக மக்கள் திருவிழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.