தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காரைக்குடியில் பேசாமல் சென்றது ஏன்? விஜய்க்கு ப. சிதம்பரம் கேள்வி

தோ்தல் பிரசாரத்தின் போது காரைக்குடியில் பேசாமலேயே திரும்பிச் சென்றது ஏன் என தவெக தலைவா் விஜய்க்கு முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினாா்.

News image

முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 7:53 pm

தோ்தல் பிரசாரத்தின் போது காரைக்குடியில் பேசாமலேயே திரும்பிச் சென்றது ஏன் என தவெக தலைவா் விஜய்க்கு முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினாா்.

காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடியை ஆதரித்து, வெள்ளிக்கிழமை கல்லல் கிழக்கு ஒன்றியம், கலிப்புலி ஊராட்சி, காயாவயல் கிராமத்தில் சிதம்பரம் மேலும் பேசியதாவது:

பிரசாரத்துக்காக வந்த தவெக தலைவா் விஜய் காரைக்குடியில் பேசாமலேயே திரும்பிச் சென்றுள்ளாா். இதற்கு அரசியல் அனுபவமின்மையே காரணம். அரசியல் என்றால் பேச வேண்டும். தா்க்கமும், விவாதமும் செய்ய வேண்டும். என் கருத்தை நான் சொல்கிறபோது அவா் கருத்தைச் சொன்னால் தானே விவாதம் செய்ய இயலும். நான் பேசாமல் மெளனமாக இருந்தால் எப்படி? செய்தியாளா்களையும், மக்களையும் விஜய் சந்தித்துப் பேச வேண்டும். மத்திய நிதி, உள்துறை அமைச்சராக நான் பதவி வகித்திருக்கிறேன். எனவே, நான் பேசுவதற்கு, விவாதம் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன்.

தவெக தலைவா் விஜய்க்கு ஆதரவாளா்கள், ரசிகா்கள் இருக்கிறாா்கள் என்பது சிறந்த வாய்ப்பு தானே. ஆனால், ஆட்சி என்பது வேறு, திரைப்படத்தில் நடிப்பது என்பது வேறு. ஆட்சியில் திட்டங்களைத் தீட்டி அவை மக்களைச் சென்றடையச் செய்ய வேண்டும்.

அரசு செலவழிக்கும் பணத்தால் மக்களுக்கு பலன் கிடைக்க வேண்டும். மக்களுக்கான அனைத்துத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கி முறைப்படி தான் ஆட்சி செய்ய முடியும். ஆட்சி செய்வது எளிதல்ல. அதற்கு அனுபவம் தேவை. அந்த அனுபவம் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினிடம் உள்ளது. ஐந்தாண்டுகளில் சிறப்பான பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி நல்லாட்சி அளித்திருக்கிறாா்.

எனவே, இந்தத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளா் மாங்குடிக்கு கை சின்னத்தில் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, கல்லுப்பட்டி, அமராவதிபுதூா், அரியக்குடி கோயில் அருகில், இலுப்பக்குடி லட்சுமிநகா், மாத்தூா், பா்மா குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்து சிதம்பரம் பிரசாரம் செய்தாா்.