/

மானாமதுரையில் களைகட்டும் மண்பாண்டத் தொழில் : கோடையில் மண்பாண்டங்களின் தேவை அதிகரிப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கோடை வெயிலில் தண்ணீருக்கு குளுமையை உண்டாக்கும் மண்பானைகள், கூஜா வகைகள் தயாரிப்பு பணிகளில்  ஏராளமான தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:49 am

வி. கருப்பையா



சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கோடை வெயிலில் தண்ணீருக்கு குளுமையை உண்டாக்கும் மண்பானைகள், கூஜா வகைகள் தயாரிப்பு பணிகளில்  ஏராளமான தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 
மானாமதுரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வந்து நிற்பது இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்ட கலைப் பொருள்கள் தான்.  
 தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. 
மானாமதுரை நகரில் குலாலர் தெரு, உடைகுளம் மற்றும் சுற்றியுள்ள சில கிராமங்களில் மண்பாண்டங்கள் தயாரிப்பு என்பது பிரதான தொழிலாக உள்ளது. மானாமதுரை பகுதியில் சீசனுக்கு தகுந்தவாறு மண் பானைகள், அக்னிச்சட்டிகள், கார்த்திகை விளக்குகள்,  கலைப்பொருள்கள், விதவிதமான அடுப்பு வகைகள், பூந்தொட்டிகள், விநாயகர் சிலைகள், சமையல் செய்வதற்கான சட்டிகள் என பல வகையான மண்பாண்டப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 
கர்நாடக இசைக் கலைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் இசைக்கருவியான கடம் மானாமதுரையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
  பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் மற்றும் பக்க வாத்தியக் கலைஞர்கள் தமிழகம் மட்டுமின்றி  வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் மானாமதுரை வந்து கடத்தை வாங்கிச் செல்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் கடம் பல்வேறு நாடுகளிலும் மானாமதுரை மண்ணின் பெருமையை ஒலித்து வருகிறது. 
இங்கு உருவாக்கப்படும் கடம் உள்ளிட்ட அனைத்து வகையான மண்பாண்டப் பொருள்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்து வரவேற்பு காணப்படுவதற்கு அவற்றின் உறுதித் தன்மை முக்கியமாகும். இதற்கு இவற்றை தயாரிக்க மானாமதுரை பகுதி கண்மாய்களில் கிடைக்கும் மண்ணின் தனித்தன்மை காரணமாகும். 
கோடைகாலம் தொடங்கியது முதல்  மண் மனத்துடன் குடிநீரை குளிரச் செய்யும் மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண்பானைகள், கூஜாக்களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. 
 மண்பானைத் தண்ணீரை குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் என்பதை உணர்ந்துள்ள மக்கள், தற்போது அனைத்து பகுதிகளிலும் பரவலாக மண்பானைத் தண்ணீரை குடிக்கத் தொடங்கியுள்ளனர். 
தொழிலாளர்கள் நேரடியாகவும், வியாபாரிகள் மூலமும்,  மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தின் மூலமும் மண்பானைகளை சந்தைப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும்  வியாபாரிகள் மானாமதுரை வந்து  மண்பானைகள், கூஜாக்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.   இங்கு தயாரிக்கப்படும் மண்பானை, கூஜாக்களின் விலை ரூ.50 லிருந்து ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. 
மானாமதுரை குலாலர் தெருவில் மண்பானைகள் தயாரிக்கும் தொழிலாளிகள் கூறியது:  
 மண்பானைத் தண்ணீர் உடலுக்கு ஆரோக்கியம் என்பதால் இங்கு தயாரிக்கப்படும் மண்பானைகள், கூஜாக்களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஆற்றில் மணல் அள்ளத் தடை உள்ளதால் தேவைக்கு ஏற்ப மண்பானைகளை தயாரிக்க முடியாத நிலை உள்ளது. 
 எனவே மணல் அள்ள உள்ள கட்டுப்பாடுகளை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உற்பத்திச் செலவும் அதிகரிப்பதால் ஆண்டுதோறும் மண்பானைகளின் விலையும் அதிகரித்து விற்க வேண்டிய நிலை உள்ளது என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.