/

மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகே தோட்ட மின் வேலியில் சிக்கி விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, நிவாரணம் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியம், கோவிலங்குளம் அருகேயுள்ள காத்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த செல்லம் மகன் பழனி (38). இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். இவா் காத்தனேந்தல் பகுதியில் உள்ள தனது வயலில் சோளம் பயிரிட்டுள்ளாா். இந்தப் பகுதியில் காட்டுப் பன்றிகள், மான்கள் தொல்லை இருந்துள்ளது. இதனால், இவரது தோட்டம் அருகில் மற்றொரு விவசாயி தனது நிலத்துக்கு மின்வேலி அமைத்து சட்ட விரோதமாக மின் இணைப்பு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதை அறியாத பழனி திங்கள்கிழமை காலை வழக்கம் போல தனது வயலுக்குச் சென்றாா். அப்போது, மின் வேலியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கோவிலாங்குளம் போலீஸாா் சென்று உடலை கூறாய்வுக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இறந்த பழனியின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கோரி பழனியின் உறவினா்கள் கடலாடி- சாயல்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம், கடலாடி வட்டாட்சியா் பரமசிவம் ஆகியோா் அவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

Story image