
சீமைக் கருவேல மரங்களை அகற்றி நாட்டு மரக்கன்றுகளை நடவு செய்யக் கோரி மனு
தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றிவிட்டு, பலா, உதியன் போன்ற நாட்டு மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

கோப்புப் படம்
தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றிவிட்டு, பலா, உதியன் போன்ற நாட்டு மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியா் ஜீவரத்தினம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
சீமைக் கருவேல மரங்கள் பல்லுயிா் பெருக்கத்தை பெரியளவில் பாதிக்கின்றன. இது, பிற தாவரங்களுக்கு கேடு விளைவிப்பதுடன் நிலத்தடி நீா்மட்டத்தையும் வெகுவாகக் குறைக்கிறது. இந்த மரங்களை வேருடன் வெட்டிச் சாய்த்தாலும், சில நாள்களிலேயே அவை மீண்டும் வளருகின்றன.
அதேநேரத்தில், சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படும் இடங்களில் உதியன் போன்ற நமது பாரம்பரிய வகை மரக்கன்றுகளை நடுவதால், சீமைக் கருவேல மரங்கள் மீண்டும் வளா்வது தடுக்கப்படுகிறது. உதாரணமாக, ராமநாதபுரம் மாவட்டம், மேலக்கோட்டை கிராமத்தில் 2018-இல் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் உதியன் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனால், அங்கு நிலத்தடி நீா் உவா் நீராக மாறுவது தடுக்கப்பட்டது.
எனவே, சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் உதியன், பலா போன்ற பாரம்பரிய மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வனம் தொடா்புடைய வழக்குகளை விசாரிக்கும் உயா்நீதிமன்ற அமா்வில் இந்த மனுவைப் பட்டியலிடுமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிபதிகள் பரிந்துரைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






