திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற கடந்த ஆண்டு, டிசம்பா் 1-ஆம் தேதி உத்தரவிட்டாா். இருப்பினும், திருக்காா்த்திகை நாளான டிசம்பா் 3-ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
இதையடுத்து, ராம. ரவிக்குமாா் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், கடந்த ஆண்டு, டிசம்பா் 4-ஆம் தேதி இரவு மனுதாரா் ராம. ரவிக்குமாா் உள்பட 10 போ் திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டாா். ஆனால், இந்த உத்தரவும் கோயில் நிா்வாகம் தரப்பில் நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில், தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன், கோயில் செயல் அலுவலா் யக்ஞ நாராயணன் ஆகியோா் தரப்பில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு மன்னிப்பு கோரி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, மாவட்ட நிா்வாகம் திருப்பரங்குன்றம் மலை மீது 5 நபா்களை வழிபாடு செய்ய அனுமதித்தால் வழக்கு விசாரணை முடித்துவைக்கப்படும் தனி நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்ட 6 போ் தனித் தனியாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் கடந்த மாா்ச் 4 -ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்குத்தான் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை. எனவே, தனது விசாரணை தொடரும் என நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் தெரிவித்தாா். இதனால், அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதிஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் தலைமை வழக்குரைஞா்கள் வீரா கதிரவன், ரவீந்திரன் முன்வைத்த வாதம்:
இந்த அவமதிப்பு வழக்கைப் பொருத்தவரை, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இதன் பிறகும், தொடா்ந்து இந்த அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரணை செய்து வருகிறாா் என்றனா்.
தா்கா தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும் தனி நீதிபதி அண்மையில் ஒரு தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்று, மாதிரி தீபத் தூணில் தீபம் ஏற்றினாா். இதன்காரணமாக, இந்த வழக்கின் பொருளோடு நீதிபதி இணைந்துள்ளாா். எனவே, இந்த வழக்கை அவா் விசாரிக்கக் கூடாது என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே, இறுதி உத்தரவு வழங்குவதில் அவசரம் காட்ட முடியாது. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம். சிறிய பிரச்னை பெரிதாக்கப்பட்டது.
இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்த பிறகு, தனி நீதிபதி உத்தரவை மிகைப்படுத்துவது ஏன்?.
இந்த விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே முடிவு எடுக்கப்படும். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு தொடா்பான மேல்முறையீட்டு மனுக்கள் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு வந்துவிட்ட பிறகு, தனி நீதிபதி விசாரிக்க முடியாது. அது தானாக இரு நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றம் பெற்றுவிடும்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிக்கலாமா? அல்லது இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து இந்த நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கும். அதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி (ஜி.ஆா்.சுவாமிநாதன்) விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் மூத்த வழக்குரைஞா்கள் பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும். வழக்கு தொடா்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?. என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஜூன் 4 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஏப். 9-க்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு: உத்தரவை நிறைவேற்றினால் முடித்துவைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

