டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு: சிபிஐ விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடா்பான விசாரணை அறிக்கையை...

News image
Updated On :20 ஆகஸ்ட் 2025, 6:31 pm

Chennai

மதுரை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடா்பான விசாரணை அறிக்கையை மதுரை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா்மன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தெரிவித்தனா்.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராசிரியை நிகிதா, தனது காரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில், அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை தனிப் படை போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.

விசாரணையின் போது, ஜூன் 28-ஆம் தேதி தனிப் படை போலீஸாரால் அஜித்குமாா் அடித்துக் கொல்லப்பட்டாா்.

இதனிடையே, அஜித்குமாா் கொலை வழக்கில் தனிப் படை காவலா்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சிபிஐ அதிகாரிகள் விசாரணையை விரைவுபடுத்தி வழக்கை முடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குரைஞா் மாரீஸ்வரன் உள்ளிட்டோா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, கோயில் காவலாளி கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், சிபிஐ அதிகாரிகள் விசாரணையை விரைவுபடுத்தி ஆக. 20-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், கடந்த ஜூலை 12-ஆம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினா். முதல் கட்டமாக, திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், வாகன நிறுத்துமிடம், அஜித்குமாா் தாக்கப்பட்ட பகுதிகள், திருப்புவனம் அரசு மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகம், உடற்கூறாய்வு செய்த இடங்களில் நேரடியாக விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, அஜித்குமாரின் குடும்ப உறுப்பினா்கள், நண்பா்கள், சக ஊழியா்கள், காவல் வாகன ஓட்டுநா், ஆட்டோ ஓட்டுநா், அஜித்குமாரை தனிப் படை காவலா்கள் தாக்கிய போது விடியோ எடுத்த நபா், மருத்துவா்கள், புகாா்தாரரான பேராசிரியை நிகிதா, அவரது தாய் ஆகியோரை மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள தங்களது அலுவலகத்துக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

இதேபோல, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த காவலா்கள் 5 பேரை இரண்டு நாள்கள் தங்களது காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி. அருள்முருகன் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் அஜ்மல்கான் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவின்படி அஜித்குமாா் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி வழக்கின் முக்கிய சாட்சிகள் 5 பேருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

சிபிஐ தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

அஜித்குமாா் காவல் மரண வழக்கில், சிபிஐ விசாரணையை முடித்து மதுரை தலைமை நீதித்துறை நடுவா்மன்றத்தில் புதன்கிழமை (ஆக. 20) இணையம் மூலம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் காவலா்கள் 5 போ் தவிர, தனிப் படை வேன் ஓட்டுநா் ராமச்சந்திரன் 6-ஆவது நபராகச் சோ்க்கப்பட்டாா். விசாரணை அறிக்கையில் 103 சாட்சிகளின் வாக்கு மூலங்கள், 102 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்றாா்.

இதற்கு, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், அஜித்குமாா் காவல் மரண வழக்கில் மட்டுமே விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அஜித்குமாருக்கு எதிராக முதலில் திருட்டு புகாா் அளிக்கப்பட்டது. இந்த வழக்கும் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இன்னும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அஜித்குமாா் காவல் மரணம் தொடா்பான வழக்கில் சிபிஐ குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இதற்காக சிபிஐ டிஎஸ்பி மோஹித்குமாா் தலைமையிலான அதிகாரிகளை நீதிமன்றம் பாராட்டுகிறது. இருப்பினும், விசாரணை முழுமையாக முடியவில்லை.

கோயில் காவலாளி அஜித்குமாா் மீதான திருட்டு வழக்கு விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. திருட்டு வழக்கின் ஆவணங்களை போலீஸாா் சிபிஐக்கு ஒரு வாரத்தில் வழங்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் செப். 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.