இந்தியாவின் பூா்வீக இனங்களாக சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பை, ராம்பூா் ஹவுண்ட், காரவன் ஹவுண்ட், முதோல் ஹவுண்ட், மஸ்டிப், ஹிமாயலன், பூட்டியா போன்ற நாய்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைக் பிறப்பிடமாகக் கொண்ட ராஜபாளையம் நாய்கள் நாயக்கா்களின் ஆட்சிக் காலத்தின்போது, தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டவை. நிறம் மற்றும் வெளித் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் ஒரு சில நாய் இனங்களில் ராஜபாளையம் நாய் இனம் குறிப்பிடத்தகுந்தது. தூய வெண்மை நிறத்துடன் சருமம் மற்றும் இளம் சிவப்பு நிறத்துடன் நாசிப்பகுதி காணப்படுவது இதன் சிறப்பு.