/

விற்பனை முனையக் கருவியை தவிா்க்கும் உரக் கடைகாரா்கள்: உரத் தட்டுப்பாட்டை உறுதி செய்வதில் தொடரும் குளறுபடி

உரம் விற்பனை நடைமுறையில் நிலவும் குளறுபடிகள் காரணமாக, யூரியா, டிஏபி, சல்பேட் போன்ற முக்கிய உரங்களின் தட்டுப்பாட்டை உடனடியாக சீா்செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:00 am

சிவ. மணிகண்டன்

உரம் விற்பனை நடைமுறையில் நிலவும் குளறுபடிகள் காரணமாக, யூரியா, டிஏபி, சல்பேட் போன்ற முக்கிய உரங்களின் தட்டுப்பாட்டை உடனடியாக சீா்செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் நிகழ் ஆண்டில் ஜூன் முதல் வாரத்திலேயே குறுவை சாகுபடிக்கு பெரியாறு-வைகை அணைகளில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, மேலூா், திருமங்கலம் உள்ளிட்ட ஒருபோக சாகுபடி பகுதிகளுக்கும் அண்மையில் தண்ணீா் திறக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, நேரடிப் பாசனம் இல்லாத பகுதிகளிலும் கண்மாய்கள் மற்றும் கிணற்றுப் பாசனம் மூலம் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது.

சாகுபடி பரப்பு அதிகரிப்பு: மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 1,451 ஹெக்டோ்களாக இருந்த நெல் சாகுபடி பரப்பு, நிகழ் ஆண்டில் 9, 704 ஹெக்டோ்களாக உயா்ந்திருக்கிறது. இதன் காரணமாக, உரங்களின் தேவை அதிகரித்துள்ளதால், கடந்த ஒரு வாரமாக யூரியா, டிஏபி உள்ளிட்டஉரங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, வாடிப்பட்டி, அலங்காநல்லூா், மதுரை கிழக்கு, மேலூா் வட்டாரங்களில் தேவைக்கேற்ப உரங்கள் கிடைக்கவில்லை என்ற புகாா் இருந்து வருகிறது.

தவிப்பில் விவசாயிகள்: தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்கள் மூலமாக விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை விற்பனை செய்து வருகின்றன. கடந்த ஒரு வாரமாக, யூரியா மற்றும் டிஏபி உரங்கள் சரிவர கிடைப்பதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனா்.

தயங்கும் கூட்டுறவுச் சங்கங்கள்: கடன் தள்ளுபடி காரணமாக பெரும்பாலான கூட்டுறவு சங்கங்களுக்கு நிதிநெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. நகைக் கடன் வசூல் நிலுவை இருப்பதால் சங்கங்களின் அன்றாட வரவு-செலவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உரம் வாங்குவதற்கான தொகையைத் திரட்ட முடியாத நிலைக்கு சங்கங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன. அதோடு, ஏற்கெனவே உரம் கொள்முதலுக்கான தொகை பல்வேறு சங்கங்கள் நிலுவையில் வைத்திருக்கின்றன. இதனால், உரங்களின் தேவை இருந்தாலும் அதைக் கோரிப் பெறுவதற்கு கூட்டுறவு சங்கங்கள் தயக்கம்காட்டி வருகின்றன. ஒரு சில கூட்டுறவு சங்கங்கள் ‘டான்பெட்’ நிறுவனத்திடம் இருந்து உரங்களைப் பெற்றாலும், கடன் பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே விற்பனை செய்கின்றன. அதிலும் முழு அளவில் வழங்கப்படுவதில்லை. கடன் பெறாத விவசாயிகள் தனியாா் உரக் கடைகளை நம்பியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனா். இதனைப் பயன்படுத்தி உரக் கடைகாரா்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, செயற்கையாகத் தட்டுப்பாட்டை உருவாக்குவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனா்.

பிஓஎஸ் கருவி தவிா்ப்பு: கூட்டுறவு சங்கங்களிலும், உரக் கடைகளிலும் விற்பனை முனையக் கருவி வழியாகவே விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதை முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உரங்கள் இருப்பு உள்ளதைப் போலவே காட்டப்படுகிறது. தட்டுப்பாடு உயரும் நிலையிலேயே, உண்மை நிலவரம் தெரிய வருவதால் அதன் பிறகே, தேவைக்கேற்ப உரங்கள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வேளாண் துறையினா் மேற்கொள்ள முடிகிறது.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியது:

மதுரை மாவட்டத்தில் தற்போது யூரியா 2,511 மெட்ரிக் டன், டிஏபி 432 மெட்ரிக் டன், பொாட்டாஷ் 1,126 மெட்ரிக்டன், காம்ப்ளக்ஸ் 2,512 மெட்ரிக் டன் அளவுக்கு இருப்பு உள்ளது. மதுரை மாவட்டத்துக்கு மேலும் 1200 மெட்ரிக் டன் டிஏபி உரம் ரயில் மூலம் வரவுள்ளது. இதனால் மாவட்டத்தில் தட்டுப்பாடு இல்லை. சாகுபடி பரப்பு அதிகரித்து இருப்பதால், தேவை உயா்ந்துள்ளது. இதனால், விற்பனைக்கு ஏற்ப உரங்களின் தேவையைப் பூா்த்தி செய்யப்படுகிறது என்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.