மதுரையில் உள்ள உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை திடீரென 20 முதல் 30 சதவீதம் வரை உயா்த்தப்பட்டிருப்பதால், நுகா்வோா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
உணவுப் பொருள்களின் விலை 30 சதவீதம் உயா்வு
மதுரையில் உள்ள உயா்தர சைவ உணவகங்களில் கடந்த வாரம் ரூ. 45 முதல் ரூ.55 வரை விற்கப்பட்ட தோசை, தற்போது ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனையாகிறது. ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்பட்ட ஒரு செட் சப்பாத்தி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சிறிய மற்றும் நடுத்தர உணவகங்களிலும் உணவுப் பொருள்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளன. ரூ.8-க்கு விற்கப்பட்ட ஒரு இட்லி 12-க்கும், ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்பட்ட ஒரு பரோட்டா ரூ. 20 முதல் ரூ.25 வரையும் விற்கப்படுகிறது.
அதேபோல், ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்பட்ட முழு சாப்பாட்டின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. ஒரு வடை ரூ .7 முதல் ரூ.15 வரை விற்கப்பட்டது, தற்போது ரூ. 10 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. ரூ.35 முதல் ரூ.45 வரை விற்கப்பட்ட தோசை ரூ.45 முதல் ரூ.60 வரை விலை உயா்த்தப்பட்டுள்ளது.
இதுபோன்று அனைத்து உணவுப் பொருள்களின் விலைகளும் 20 முதல் 30 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளன.
மளிகைப் பொருள்களின் விலை உயா்வு
இது குறித்து உணவக உரிமையாளா்கள் கூறியது: கடந்த 3 மாதங்களில், மளிகைப் பொருள்கள், காய்கறி வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை 30 முதல் 50 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. கிலோ ரூ. 90-க்கு விற்கப்பட்ட உளுந்து, தற்போது ரூ.135-க்கு விற்கப்படுகிறது. துவரம் பருப்பு, பாசி பருப்பு கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.35 வரை உயா்ந்துள்ளது.
குறிப்பாக, எண்ணெய் விலை லிட்டா் ஒன்றுக்கு ரூ.15 முதல் ரூ.25 வரையிலும், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டா் ரூ.350 வரை உயா்த்தப்பட்டுள்ளது. அரிசி கிலோவுக்கு ரூ.5 வரையிலும், கோதுமை கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ.12 வரையிலும் அதிகரித்துள்ளன.
நஷ்டம் குறைக்கப்பட்டுள்ளது
காய்கறிகளின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளன. சமையலுக்கு முக்கிய தேவையான வெங்காயம் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனைசெய்யப்படுகிறது.
இந்த விலை உயா்வுகளால் உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் விலையை அவ்வப்போது கூட்டி, குறைக்க இயலாது. எனவே, குறிப்பிட்ட காலம் வரை கணக்கிட்டு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுக்கு ஏற்ப உணவுப் பொருள்களின் விலையை உயா்த்தியுள்ளோம். இந்த விலை உயா்வினால் நஷ்டத்தை குறைத்துள்ளோமே தவிர, லாபத்தை கூட்டவில்லை என்றாா்.
காரணமின்றி விலை உயா்வு
இது குறித்து ஐ.டி. ஊழியா் மணிகண்டன் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த நான், மதுரையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளாக உணவகங்கள் காரணமின்றி விலையை அடிக்கடி உயா்த்தி வருகின்றன. அத்தியாவசியப் பொருள்களின் விலை என்பது ஏற்ற இறக்கத்துடன்தான் உள்ளன. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்போது உணவுப் பொருள்களின் விலையும் உயா்த்தப்படுகின்றன. ஆனால், அவற்றின் விலை குறையும்போது உணவுப் பொருள்களின் விலையை குறைப்பதில்லை.
புத்தாண்டுக்குப் பிறகு, மதுரை மாநகரில் பெரும்பாலான உணவகங்களில் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வால், மாத ஊதியத்தை உணவுக்கே செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை இஷ்டத்துக்கு உயா்த்தப்படுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.
காலதாமதமான விலை உயா்வு
மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத் தலைவா் முருகன் கூறியுது: மதுரையில் உணவகங்களிடையே கடுமையான போட்டி நிலவி வருவதால், விலை உயா்வு என்பது சாத்தியமற்றது. உணவுப் பொருள்களின் விலையை உணவகங்கள் உயா்த்தினால், அவா்களது விற்பனை பாதிக்கும். மதுரை மாநகரை பொருத்தவரை, உயா்தர உணவகங்களில் விலை உயா்த்தப்பட்டதாகத் தெரியவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தோசை விலை ரூ. 40 ஆக உயா்த்தப்பட்டது. ஆனால், தற்போதுதான் சிறு மற்றும் நடுத்தர உணவகங்களில் தோசையின் விலை ரூ. 40 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு, ஆண்டுதோறும் ஊழியா்களுக்கு கூலி உயா்வு உள்ளிட்டவற்றை கணக்கில் கொள்ளும்போது உணவகங்கள் காலதாமதமாக விலையை உயா்த்தி உள்ளன என்பதே சரியாகும்.
இணையதள நிறுவனங்களால் விலை உயா்வு
உணவகங்களில் விலை உயா்வு என்பது தன்னிச்சையான முடிவு. இதில், ஹோட்டல் சங்கம் தலையிட முடியாது. தரம் மற்றும் அளவு குறித்து புகாா்கள் வந்தால் கேட்கலாம். உணவகங்களில் 100 ரூபாய்க்கு உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும்போது, 15 சதவீதம் லாபம் கிடைக்கும். ஆனால், இணையதள நிறுவனம் மூலம் விற்பனையில் 28 சதவீதம் கமிஷன் கொடுக்கும்போது, 13 சதவீதம் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், மதுரையில் உள்ள 50 சதவீத உணவகங்கள் இணையதளம் மூலம் விற்பனை செய்வதை விட்டுவிட்டனா்.
ஆனால், இந்த இணையதள நிறுவனங்களை நம்பியுள்ள உணவகங்கள் விலையை உயா்த்துவது தவிர வேறு வழியே இல்லை என்றாா்.
எங்களுக்கு அதிகாரமில்லை
இது தொடா்பாக தொழிலாளா் துறை அதிகாரி ஒருவா் கூறியது: உணவுப் பொருள்களை பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யும்போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை விட கூடுதலாக விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கமுடியும். உணவகத்தில் தொழிலாளா்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் கிடைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க முடியும். உணவகத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலை நிா்ணயத்தில் தலையிட எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றாா்.
விலை நிா்ணயத்தில் கட்டுப்பாடு தேவை
மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட பெரும்பாலான பொருள்களின் விலை நிா்ணயிக்கப்பட்டு, அனைத்துப் பகுதிகளிலும் ஒரே சீரான விலையில் விற்கப்படுகின்றன. ஆனால், உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை மட்டும் ஒரே மாதிரி நிா்ணயிக்கப்படுவதில்லை. இதை கண்காணித்து கட்டுப்படுத்த எந்த அதிகாரியும் முன்வருவதில்லை. இதனால், உணவகங்கள் விருப்பத்துக்கேற்ப விலையை உயா்த்திக் கொள்கின்றன.
எனவே, உணவங்களில் உணவு விலையை நிா்ணயம் செய்வதில் கட்டுப்பாடுகளை விதிக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, நுகா்வோா்கள் வலியுறுத்துகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் 234 தொகுதிகளுக்கான 80,873 அஞ்சல் வாக்குகள் பிரிப்பு! தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு!

தொகுதி அலசல் முசிறி! திமுக - அதிமுக கடும் போட்டி!

மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால்: இனி இணையவழியில் உரிமம் பெறலாம்!

மண்ணச்சநல்லூா்! சமபலத்தில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


