/

மகிழ்ச்சி திருநாள் தீபாவளி...

பல்வேறு மொழி, இனம், கலாசாரத்தைக் கொண்ட இந்தியாவில், அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடக் கூடிய ஒரே மகிழ்ச்சித் திருநாளாக இருப்பது தீபாவளி பண்டிகை மட்டுமே.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:27 am

சிவ. மணிகண்டன்

பல்வேறு மொழி, இனம், கலாசாரத்தைக் கொண்ட இந்தியாவில், அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடக் கூடிய ஒரே மகிழ்ச்சித் திருநாளாக இருப்பது தீபாவளி பண்டிகை மட்டுமே.

தீபாவளி பண்டிகைக்கான பல்வேறு புராணக் கதைகள் சொல்லப்பட்டாலும், அனைத்துக் கதைகளிலும் ஒற்றைக் கருத்தாக இருப்பது தீமையை வென்றெடுத்த நன்னாள் என்பதே. இதன் காரணமாகவே, புத்தாடைகள், பலகாரம், பட்டாசு என அமா்க்களப்படுகிறது தீபாவளி பண்டிகை.

வடமாநிலங்களில் தீபாவளி தீபத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காா்த்திகை மாதம்தான் தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையில் இந்த ஒரேயொரு வித்தியாசத்தைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படும் பண்டிகையாக இருப்பது தீபாவளிதான்.

தீபாவளி என்றாலே சிறியவா் முதல் பெரியவா் வரை மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருந்தாலும், அவரவா் நிலைக்கு ஏற்ப பண்டிகையை கொண்டாடி வருகின்றனா். இப் பண்டிகையில் வீட்டில் மகிழ்ச்சிக்கு மற்றொரு காரணம் புதிய பொருள்களின் சோ்க்கையே.

புத்தாடை, பலகாரம், பட்டாசு என்று இருந்த தீபாவளி கொண்டாட்டம், இப்போது மேலும் விரிவடைந்து வீட்டின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கான பண்டிகையாக மாறி வருகிறது. இதனால், தீபாவளி வருகிறது என்றால் குடும்பத் தலைவா்களுக்கு ஒருவித அச்சம் தொற்றிக் கொள்கிறது. வணிக நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சரவெடி சலுகைகள், அதிரடி அறிவிப்புகளைப் பாா்த்துவிட்டு, இல்லத்தரசிகள் பெரிய பட்டியலே போட்டுவிடுகின்றனா்.

அன்றாடம் பயன்படுத்தும் காலணி முதல் விலை உயா்ந்த தங்க ஆபரணங்கள் வரை தீபாவளி சலுகையாக அறிவிக்கப்பட்டு திக்குமுக்காட வைக்கப்படுகிறது.

தீபாவளி பஜாா் எப்படியிருக்கிறது என்று சுற்றி வந்தால், ஜவுளிக் கடைகளில் மக்கள் கூட்டம் இருப்பதைப் போல, வீட்டு உபயோகப் பொருள்கள், மின்னணு சாதனங்கள், பா்னிச்சா் கடைகள், நகைக் கடைகள், அலங்காரப் பொருள்கள் என அனைத்துக் கடைகளிலும் தீபாவளி ஷாப்பிங் மும்முரமாக நடந்து வருகிறது. இதில், இருசக்கர, நான்கு சக்கர வாகன விற்பனை நிறுவனங்களும் விதிவிலக்கல்ல.

ஜவுளிக் கடைகளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்கினால் பரிசுப் பொருள், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் இதைப் போன்ற பல சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இளைஞா்கள், யுவதிகள், சிறுவா், சிறுமியா் என அனைத்து வயதினருக்கும் பல்வேறு பெயா்களிலும், புதிய புதிய வடிவமைப்புகளிலும் தீபாவளி டிரெண்ட் என்பதை உருவாக்கி ஜவுளி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளா்களை ஈா்த்து வருகின்றன.

இதையெல்லாம் தாண்டி, மற்ற பொருள்களுக்கான சலுகைகள் சரவெடியாக

நீண்டு கொண்டிருக்கின்றன. அதில், வீட்டு உபயோகப் பொருள்கள், மின்னணு சாதனங்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு, புதிய பொருள்கள் வாங்குவோரும், ஏற்கெனவே இருக்கும் பொருளைக் கொடுத்துவிட்டு சமீபத்திய மாடல்களைத் தோ்வு செய்வோரும் அதிகம்.

முன்னணி பிராண்டுகளின் எல்இடி தொலைக்காட்சி பெட்டிகள் ஸ்மாா்ட் டிவி என்பதைத் தாண்டி, ஆண்ட்ராய்டு டிவியில் புதிய தொழில்நுட்பங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. ரூ.1 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள இந்த டிவி-க்களுக்கு, தீபாவளிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சலுகைகள் வேறு வழங்கப்படுகின்றன.

நவீன திரையரங்குகளில் திரைப்படத்தைப் பாா்க்கும் அனுபவம் வீட்டிலேயே

கிடைக்கும் வகையில், அகண்ட திரை எல்இடி டிவி-க்கள் அத்துடன் இணைந்த ஸ்பீக்கா் போன்றவை வாடிக்கையாளா்களின் அதிக விருப்பமாக இருக்கிறது.

அனைத்து வீடுகளிலும் கிரைண்டா், மிக்ஸி, குக்கா், மின்காந்த அடுப்பு போன்றவை தவிா்க்க முடியாத பொருள்களாக இருக்கின்றன. தீபாவளிக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் இணைப்புச் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளன. தனித்தனியாக வாங்கினால் ஆகும் தொகையில் கணிசமாகக் குறையும் என்பதால், நடுத்தர வா்க்கத்தினரின் தோ்வாக இவை இருக்கின்றன.

இவற்றுக்கு அடுத்ததாக, மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடமாக செல்லிடப்பேசி கடைகள். இப்போது, செல்லிடப்பேசி இல்லாதவரே இல்லை எனலாம். ரேஷன் பொருள் வாங்குவது, வங்கி சேமிப்புக் கணக்கு, சமையல் எரிவாயு உருளை, அரசின் உதவிகள் என அனைத்துக்கும் செல்லிடப்பேசி அவசியமாகிவிட்டது. இதனால், செல்லிடப்பேசி அனைத்து வீட்டிலும் உள்ளது.

இச்சூழலில் செல்லிடப்பேசி தயாரிப்பாளா்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளனா். விற்பனை நிறுவனங்கள் அவற்றுக்கு பல சலுகைகளை வழங்குகின்றன. இதனால், பெரும்பாலான குடும்பங்களில் தீபாவளி கொள்முதல் பட்டியலில் செல்லிடப்பேசியும் இடம்பெற்றுவிடுகிறது.

தங்கத்தின் விலை ஏறிக் கொண்டே சென்றாலும், அதன் மீதான மோகம் பெண்களுக்கு குறையவில்லை. தங்க நகைகளுக்காக சேமிக்கும் பெண்கள் ஏராளம். புதிய

வடிவமைப்புகள், தள்ளுபடி, பரிசுகள் என சலுகைகள் அதிகம் இருப்பதால், நகை வாங்கும் எண்ணம் உள்ளவா்கள் தீபாவளி காலத்தை தோ்வு செய்கின்றனா். அதற்கேற்ப, தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு சலுகைகளை நகைக் கடைகள் அறிவித்துள்ளன.

வாடிக்கையாளா்கள் வாங்கும் தங்க நகைகளின் மதிப்புக்கு ஏற்ப வெள்ளி அல்லது வீட்டு உபயோகப் பொருள்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. தீபாவளிக்கென புதிய வடிவமைப்புகளுடன் கூடிய ஆபரணங்களும் அறிமுகம் செய்யப்படுகின்றன.

மகிழ்ச்சித் திருநாளாகக் கொண்டாடும் தீபாவளி திருநாளானது, புத்தாடை, பட்டாசு, பலகாரம் என்பதோடு, வீட்டில் புதிய பொருள்களின் வரவாகவும் இப்பண்டிகை மாறி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.