தமிழக அரசின் நில கையகப்படுத்துதல் சட்டம் ரத்து: மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு சிக்கல்!
தமிழக அரசு கொண்டு வந்துள்ள நில கையகப்படுத்தும் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து


தமிழக அரசு கொண்டு வந்துள்ள நில கையகப்படுத்தும் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரையை சர்வதேச நாடுகளுடன் இணைக்கும் வகையில், மதுரை விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்கம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது 7,500 அடியாக இருக்கும் ஓடுபாதையின் நீளத்தை 12,500 அடியாக நீட்டித்து விரிவாக்கம் செய்யும் வகையில் விமான நிலையங்கள் ஆணையத்தால் திட்டம் தயாரிக்கப்பட்டது.
இதன்படி விமான நிலைய விரிவாக்கத்துக்கு 614 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைக்க தமிழக அரசு கடந்த 2009-இல் ஒப்புதல் அளித்தது. விமான நிலையத்தைச் சுற்றியுள்ள அயன்பாப்பாகுடி, பெருங்குடி, குசவன்குண்டு, பாப்பான் ஓடை, ராமன்குளம், கூடல்செங்குளம் ஆகிய கிராமங்களில் இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலங்களை இறுதி செய்வது, நிலஉரிமையாளர்களிடன் கருத்துக் கேட்பது என நடைமுறைகளுக்கே பல ஆண்டுகள் ஓடிவிட்டன. நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, சந்தை மதிப்புக்கு இழப்பீடு தொகை வேண்டும் என நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கையகப்படுத்தும் நிலங்களுக்கு மாவட்ட அளவிலான குழு நிர்ணயம் செய்த இழப்பீடு தொகையை, மாநில அளவிலான குழு பரிசீலித்து அரசுக்கு அனுப்புவது, அதன் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு செய்வதற்கு மேலும் தாமதம் ஆனது.
பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரூ.166 கோடி இழப்பீடு வழங்க 2018-இல் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதில் முதல்கட்டமாக விடுவிக்கப்பட்ட ரூ.94 கோடியில், 50 சதவீத தொகை நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசிடம் இருந்து வரவேண்டிய எஞ்சிய தொகையையும் வழங்குமாறு மாவட்ட நிர்வாகம் கருத்துரு அனுப்பியுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் பணிகளை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதம், விமான நிலைய விரிவாக்கத்துக்குப் பெரும் தடையாக இருந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசு கடந்த 2013-இல் கொண்டு வந்த நில கையகப்படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசு 2015-இல் சில திருத்தங்களைக் கொண்டு வந்ததது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த சட்டத்தை அண்மையில் ரத்து செய்துள்ளது.
அந்த உத்தரவின்படி 2013-க்குப் பிறகு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருந்தால் அந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையகப்படுத்தும் நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்பட்ட பிறகு, தற்போது பயன்பாட்டில் உள்ள மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து கப்பலூர் வரையிலான சுற்றுச் சாலையில் விமான நிலைய விரிவாக்கம் இடம் பெறும் பகுதியில் சுமார் 6.5 கி.மீ.க்கு மாற்றுச் சாலை அமைக்கவும், அதன் பிறகு கையகப்படுத்தப்பட்ட 614 ஏக்கர் நிலத்தை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகள் நடந்து வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழக அரசு எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையில் தான் மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது தெரியவரும்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டதற்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக அரசின் வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கிறோம். அரசுத் தரப்பில் சட்ட ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அரசிடம் இருந்து வரக்கூடிய வழிகாட்டுதலின்படியே விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...