எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தேசிய அடைவுத் திறன் தேர்வு: மாநிலத்தில் 24 ஆவது இடம் பிடித்து பின்னோக்கிச் சென்ற மதுரை மாவட்டம்! 

தேசிய அளவில் மாணவ, மாணவர்களின் கற்றல் திறனை அறியும் வகையில் நடத்தப்பட்ட அடைவுத்திறன் தேர்வில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:16 pm

ஜெயப்பாண்டி

தேசிய அளவில் மாணவ, மாணவர்களின் கற்றல் திறனை அறியும் வகையில் நடத்தப்பட்ட அடைவுத்திறன் தேர்வில், (N​a‌t‌i‌o‌n​a‌l Ac‌h‌i‌e‌v‌e‌m‌e‌n‌t S‌u‌r‌v‌e‌y)  தமிழக அளவில் மதுரை மாவட்டமானது 24 ஆவது இடத்துக்கு பின்தங்கியிருப்பது, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு, ஆண்டுதோறும்  தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்காக அவர்களது கற்பித்தல் திறனை அறியும் வகையில், அடைவுத் திறன் தேர்வை நடத்தி வருகிறது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிப் பாடம் ஆகிய பாடங்களில் மிக எளிமையான வினாக்கள் மூலம் 150 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. 
    கடந்த 2017 நவம்பரில் தேசிய அளவில் இத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், மதுரை மாவட்டமானது 24 ஆவது இடத்தைப் பெற்றது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 3 ஆம் வகுப்பில் 1,068 பேரும், 5ஆம் வகுப்பில் 1,134 பேரும், 8 ஆம் வகுப்பில் 1,226 பேரும் என மொத்தம் 3,430 பேர் இத் தேர்வை எழுதினர். இவர்களில் ஒட்டுமொத்தமாக 46.35 சதவிகிதம் பேர் தேர்வாகியுள்ளனர். அதில், 3ஆம் வகுப்பில் 30 சதவிகிதம்,  5ஆம் வகுப்பில் 46.7 சதவிகிதம், 8ஆம் வகுப்பில் 56.05 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  
மூன்றாம் வகுப்பில் ஆங்கிலத்தில் 14.89 சதவீதம், கணிதத்தில் 9.93 சதவீதத்தினரும் தேர்வாகிய நிலையில், ஐந்தாம் வகுப்பில் மொழிப் பாடத்தில் 18.52 சதவீதம், கணிதத்தில் 26.63 சதவீதம், எட்டாம் வகுப்பில் கணிதத்தில் 32.53 சதவீதம், மொழிப் பாடத்தில் 55.42 சதவீதம் என தேர்ச்சி அடைந்துள்ளனர். 
   அடைவுத்திறன் தேர்வில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி 31.63 சதவீதம், அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி 33.50 சதவீதமாகவும் உள்ளது. இதில், மிக எளிய வினாக்களுக்கு கூட 30 சதவிகிதத்தினர் மட்டுமே சரியான பதிலை அளித்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு தேசிய அடைவுத்திறன் தேர்வில், மதுரை மாவட்டமானது 16 ஆவது இடம் வகித்த நிலையில், நடப்பாண்டில் 24 ஆவது இடத்துக்கு பின்தங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மதுரை மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையிலே இருந்து வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில் 13ஆவது இடத்தில் இருந்த மதுரை மாவட்டமானது, 2017 ஆம் ஆண்டில் 18 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 
 அடைவுத் திறன் தேர்வு பட்டியலில், மிகவும் பின்தங்கிய மாவட்டமாகக் கருதப்படும் பெரம்பலூர் முதலிடத்தையும், தருமபுரி இரண்டாமிடத்தையும் வகித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரைக்கு பக்கத்து மாவட்டங்களான  சிவகங்கை மூன்றாமிடத்தையும், ராமநாதபுரம் நான்காமிடத்தையும்  வகித்துள்ளன. கல்விக்காக தமிழக அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் அனைத்தும் மதுரை மாவட்டத்தில் முழுமையாகச் செயல்படுத்துவதாக, கல்வித் துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால், அரசுப் பொதுத் தேர்வு மற்றும் திறனறிதல் தேர்வுகளில் மதுரை மிகவும் பின்தங்கியிருப்பது ஏன்? என்ற கேள்வியையும் முன்னாள் கல்வி அதிகாரிகள் எழுப்புகின்றனர். 
  மதுரை மாவட்டத்தில் உள்ள கல்வி அதிகாரிகள்,  காலிப்பணியிடங்களை நிரப்புவதிலும், புதிய வகுப்பறைக் கட்டுதல் உள்ளிட்ட அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் மட்டுமே அதிக அக்கறை செலுத்துவதாகவும், மாணவர்களுக்கான கற்பித்தல், தேர்வுகளுக்கு அவர்களைத் தயார் செய்தலில் போதிய அக்கறை செலுத்துவதில்லை என்றும், கல்வித் துறை முன்னாள் அதிகாரிகள் ஆதங்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வுகளில் மதுரை மாவட்டத்தில் மொத்தம் 30 பேர் மட்டுமே தேர்வானதாகவும், அதில், மாநகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் 9 பேர் என்றும், அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 
 இது குறித்து மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என். மாரிமுத்து கூறுகையில், தேசிய அடைவுத்திறன் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக கல்வித் துறை அறிவிக்கவில்லை. அறிவிப்பு வந்த பிறகே அது குறித்து கருத்துக்கூற முடியும். தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.