ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அரசு கேபிள் டி.வி.யின் குளறுபடி நடவடிக்கைகள்: தனியார் செட்-ஆப் பாக்ஸ், டிடிஎச் சேவைக்கு மாறும் வாடிக்கையாளர்கள்

அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் குளறுபடிகளால், தனியார் கேபிள் நிறுவனங்கள் மற்றும் டிடிஎச் சேவைக்கு மாறும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:13 pm

சிவ. மணிகண்டன்

அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் குளறுபடிகளால், தனியார் கேபிள் நிறுவனங்கள் மற்றும் டிடிஎச் சேவைக்கு மாறும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கேபிள் தொலைக்காட்சி சேவையில் ஒரே நிறுவனத்தின் ஏகபோக உரிமையைத் தடுக்கும் வகையில், அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன்பின்னர், தமிழகம் முழுவதும் அரசுத் தொலைக்காட்சி வழியாகவே கேபிள் சிக்னல்கள் பெறப்பட்ட உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலமாக கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு நடைபெற்று வந்தது.
இதற்கிடையே, டிடிஎச் என்ற வீடுகளிலேயே சிறிய ஆன்டெனா மூலமாக கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையை பல்வேறு நிறுவனங்கள் அறிமுகம் செய்தன. ஆனால், மாதாந்திரக் கட்டணம் குறைவு என்பதால், சாமானிய மக்கள் அரசுத் தொலைக்காட்சி இணைப்பையே பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான உரிமத்தை மத்திய அரசிடம் பெற்றன. இத்தகைய உரிமம் பெற்ற நிறுவனங்கள் நகரப் பகுதிகளில் செட்-ஆப் பாக்ஸ் மூலமாக கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையை வழங்கி வருகின்றன.
அரசு கேபிள் தொலைக்காட்சி 'அனலாக்' முறையில் ஒளிபரப்பு செய்துவந்த நிலையில், தனியார் நிறுவனங்களின் செட்-ஆப் பாக்ஸ் மூலமாக எச்டி தொழில்நுட்பத்தில் சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படுவதால், இது மக்களிடம் வரவேற்பைப் பெற்றது.
தனியார் நிறுவனங்களின் செட்-ஆப் பாக்ஸுகள் ரூ.1300 முதல் ரூ.1600 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதாந்திரக் கட்டணம் ரூ.165 முதல் சேனல்கள் தொகுப்புக்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. அரசுத் தொலைக்காட்சியில் இருக்கும் தெளிவற்ற ஒளிபரப்பு காரணமாக, பலரும் செட்-ஆப் பாக்ஸுகளுக்கு மாறிவிட்டனர்.மதுரை மாநகரப் பகுதியில் மட்டும் அரசுத் தொலைக்காட்சியைத் தவிர, 5 நிறுவனங்கள் செட்-ஆப் பாக்ஸ் மூலமாக கேபிள் ஒளிபரப்பு சேவையை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், டிராய் உத்தரவின்படி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாகவே கேபிள் ஒளிபரப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் தற்போது அரசுக் கேபிள் தொலைக்காட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதற்கேற்ப அரசுத் தொலைக்காட்சி வாடிக்கையாளர்களுக்கு செட்-ஆப் பாக்ஸுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், செட்-ஆப் பாக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காகப் பின்பற்றப்படும் நடைமுறையில் உள்ள குளறுபடிகள், கேபிள் தொலைக்காட்சி சேவையில் மக்களிடையே குழப்ப நிலையை ஏற்படுத்தி இருக்கின்றன.
மக்களுக்கு செட்-ஆப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும். அதை நிறுவுவதற்கான கட்டணமாக ரூ.200 மட்டும் கேபிள் ஆபரேட்டர்களிடம் வழங்கினால் போதும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், ஆபரேட்டர்களிடம் செட்-ஆப் பாக்ஸ் மாதம் ரூ.30 வாடகை என்ற அடிப்படையில் 6 மாதங்களுக்கு ரூ.180 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் வசூலிக்கின்றனர். செட்-ஆப் பாக்ஸுக்கு அந்தந்த கேபிள் ஆபரேட்டர்கள்தான் பொறுப்பு என அரசுத் தொலைக்காட்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொள்கிறது. இதனால், ஆபரேட்டர்கள் செட்-ஆப் பாக்ஸுக்கு வைப்புத் தொகையாக ரூ.500 முதல் ரூ.1000 வரை வசூலிக்கின்றனர். ரூ.200 மட்டுமே தரவேண்டும் என்று அறிவித்துள்ள நிலையில், ஆபரேட்டர்கள் அதிகத் தொகை கேட்பதால் பல இடங்களில் பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் கணக்கின்படி, சுமார் 3 லட்சம் இணைப்புகள் உள்ளன. இதில், இதுவரை 50 ஆயிரம் இணைப்புகளுக்கு மட்டுமே செட்-ஆப் பாக்ஸ் கேட்டு ஆபரேட்டர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
பெரும்பாலான கேபிள் ஆபரேட்டர்கள் அரசுத் தொலைக்காட்சியை விரும்பி வரவேற்ற நிலையில், அந் நிறுவனத்தின் குளறுபடியான செயல்பாடுகளால் மீண்டும் தனியாரை நோக்கி கேபிள் ஆபரேட்டர்கள் செல்லத் தொடங்கிவிட்டனர். மதுரையில் கேபிள் ஆபரேட்டர்கள் சங்கத்தினரே செட்-ஆப் பாக்ஸ் மூலமாக தொலைக்காட்சி ஒளிப்பரப்பு செய்து வருகின்றனர்.
இது குறித்து கேபிள் ஆபரேட்டர்கள் கூறியது: அரசுத் தொலைக்காட்சி நிறுவனத்தின் குளறுபடியான செயல்பாடுகளால், பல ஆபரேட்டர்கள் தனியார் நிறுவனத்தின் செட்-ஆப் பாக்ஸுகளுக்கு மாறி வருகின்றனர். கட்டணம், செட்-ஆப் பாக்ஸ் விலை ஆகியவற்றை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இலவசம் என அறிவித்துவிட்டு, அதற்கான முழு பொறுப்பையும் ஆபரேட்டர்களை ஏற்கச் சொல்கின்றனர். இதனால், மக்களிடம் வைப்புத் தொகை வசூலிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
அரசுத் தொலைக்காட்சி நிறுவனம் செட்-ஆப் பாக்ஸ் வழங்கினாலும், அதில் எச்டி சேனல் ஒளிப்பரப்பு இல்லை. அரசு குறைந்த கட்டணத்தில் எச்டி பாக்ஸுகளை வழங்க முடியும்.
அதைச் செய்யாத காரணத்தால், பெரும்பகுதியினர் தனியார் நிறுவனங்களின் ஒளிபரப்புக்கும், டிடிஎச் சேவைக்கும் மாறி வருகின்றனர் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.