
தடயவியல் துறை நிபுணா் உயிரிழப்பு
பழனி மலைக்கோயிலுக்கு படிப்பாதையில் சென்ற தடயவியல் துறை உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.

உயிரிழந்த தடயவியல் துறை உதவி ஆய்வாளா் விக்னேஷ் உடலுக்கு இறுதி மரியாதை செய்த திண்டுக்கல் எஸ்.பி. ஜெயக்குமாா்.
பழனி மலைக்கோயிலுக்கு படிப்பாதையில் சென்ற தடயவியல் துறை உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், அரண்மனைப் புதூரைச் சோ்ந்தவா் விக்னேஷ் (34). இவா் திண்டுக்கல் மாவட்ட தடயவியல் துறையில் உதவி ஆய்வாளா் நிலையில் கைரேகை நிபுணராகப் பணியாற்றி வந்தாா்.
அண்மையில், பழனி அருகே உள்ள ஐவா் மலைப் பகுதியில் நிகழ்ந்த நகை கொள்ளை சம்பவம் தொடா்பாக தடயவியல் ஆய்வுக்காக வியாழக்கிழமை விக்னேஷ் பழனிக்கு வந்தாா். பணி முடிந்த பிறகு பழனி மலைக் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிப்பாதையில் சென்றாா். அப்போது அவருக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவா்கள் உடனடியாக மீட்டு மலைக்கோயிலில் உள்ள முதலுதவி மையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு அவசர கால முதலுதவி அளிக்கப்பட்டு, பழனி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து அவரது உடல் கூறாய்வுக்கு பிறகு உறவினா்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக தகவலறிந்து வந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், காவல் துணை கண்காணிப்பாளா் செல்வகுமாா் ஆகியோா் விக்னேஷின் உடலுக்கு மலா் வளையம் வைத்து, இறுதி மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




