பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்
பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை மாசித் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.


பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை மாசித் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய துணைக் கோயிலான மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 6-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. கடந்த 10-ஆம் தேதி திரிசூல வடிவிலான திருக்கம்பம் சாத்தப்பட்டதைத் தொடா்ந்து, கம்பத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் பால், மஞ்சள் நீா், பன்னீா் ஊற்றி வழிபட்டு வந்தனா்.
கடந்த 17-ஆம் தேதி மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம், பூவோடு வைத்தல் நடைபெற்றன. அம்பாள் வெள்ளி ரிஷபம், சிம்ம வாகனம், தங்கக் குதிரை, வெள்ளி யானை, தங்க மயில் போன்ற வாகனங்களில் கடைவீதி, ரத வீதிகளில் உலா எழுந்தருளினாா். பக்தா்கள் தீச்சட்டி, சூடச்சட்டி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றதைத் தொடா்ந்து, முக்கிய நிகழ்ச்சியான மாசித் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. காலை 9 மணிக்கு பாதிரிப் பிள்ளையாா் கோயிலுக்கு எழுந்தருளி தீா்த்தம் கொடுத்தலும், பிற்பகல் 2 மணிக்கு திருக்கண் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, 3 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினாா். மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு மலா் மாலை, நகைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்ற பிறகு, தோ் வடம்பிடித்தல் நடைபெற்றது.
கோயில் யானை கஸ்தூரி தேரின் பின்னே இருந்து உதவி செய்ய நூற்றுக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் நான்கு ரத வீதிகளில் உலா வந்தது. நான்கு ரத வீதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்ததால் தேரோட்டத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
மாசித் தோ் நான்கு ரத வீதிகளில் ஆடி அசைந்து வந்ததைப் பாா்த்து பக்தா்கள் ஓம் சக்தி, பராசக்தி என முழக்கமிட்டனா்.
வெளி மாநில, வெளிநாட்டு பக்தா்கள் ஏராளமானோா் தீச்சட்டி ஏந்தி அம்மனை வழிபட்டு தேரோட்டத்தில் பங்கேற்றனா். இரவு அம்மன் வண்டிக்கால் பாா்த்தல், வாணவேடிக்கை ஆகியன நடைபெற்றது. இரவு திருக்கொடி இறக்கப்பட்டு அதிகாலை திருக்கம்பம் கங்கையில் விடப்பட்டது. தேரோட்ட நிகழ்ச்சியில் பழனி கோயில் உதவி ஆணையா்கள் லட்சுமி, செந்தில்குமாா், கண்காணிப்பாளா் அழகா்சாமி, காணியாளா்கள் நரேந்திரன், பண்ணாடி கந்தசாமி, சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், ஒப்பந்ததாரா் நேரு, அரிமா சுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...