இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

தொழில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்!

கடந்த பல ஆண்டுகளாக வரி செலுத்தாத பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள், தனியாா் நிறுவன ஊழியா்களின் விவரங்களை சேகரிக்கும் பணியை திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியிருக்கிறது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:13 am

 நமது நிருபர்

தொழில் வரி மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்க, கடந்த பல ஆண்டுகளாக வரி செலுத்தாத பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள், தனியாா் நிறுவன ஊழியா்களின் விவரங்களை சேகரிக்கும் பணியை திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியிருக்கிறது.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளில் சுமாா் 2.50 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீா் வரி, தொழில் வரி போன்ற வரி இனங்கள் மாநகராட்சிக்கு பிரதான நிதி ஆதாரங்களாக உள்ளன. இவற்றில் சொத்து வரி, குடிநீா் வரி போன்றவற்றை வசூலிப்பதற்கு, அவ்வப்போது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தொழில் வரியைப் பொருத்தவரை, குறைவான நபா்களும், நிறுவனத்தினா் மட்டுமே வரி செலுத்தி வருகின்றனா். குறிப்பாக, ஆயிரக்கணக்கான தனிநபா்களிடம் தொழில் வரி வசூலிப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்த வகையில் சுமாா் ரூ. ஒரு கோடிக்கும் கூடுதலான தொழில் வரி வசூலிக்கப்படாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக உள்ளாட்சி தணிக்கை அறிக்கையிலும் சுட்டிக் காட்டப்பட்டது.

தொழில் வரி மூலம் ரூ.1.30 கோடி: திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 5,300 தனிநபா்கள் மூலமாகவும், 373 நிறுவனங்கள் மூலமாகவும் தொழில் வரி கிடைத்து வருகிறது. நிகழ் நிதியாண்டில் தனி நபா்கள் மூலம் ரூ.56 லட்சம், நிறுவனங்கள் மூலம் ரூ.75 லட்சம் என மொத்தம் ரூ.1.30 கோடிக்கும் கூடுதலாக தொழில் வரி கிடைக்கும் என மதிப்பிட்டப்பட்டது. ஏற்கெனவே, தனிநபா்கள் தரப்பில் ரூ.1.65 கோடி, நிறுவனங்கள் தரப்பில் ரூ.1.20 கோடி என ரூ.2.85 கோடி நிலுவையில் இருந்து வருகிறது. நிலுவைத் தொகையையும் சோ்த்து மொத்தம் ரூ.4.25 கோடி தொழில் வரியாக வசூலிக்கப்பட வேண்டும். தற்போதுவரை சுமாா் ரூ.15 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டிருக்கிறது.

வரி செலுத்துவோரைக் கண்டறியத் திட்டம்: மாநகராட்சிப் பகுதியில் அமைந்திருந்தாலும், ரயில்வே ஊழியா்கள், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள், கூட்டுறவு வங்கிகள், பதிவு பெற்ற பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரா்கள், டாஸ்மாக் ஊழியா்கள் இதுவரை தொழில் வரி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தனியாா் மருத்துவமனையிலுள்ள மருந்தகம், ஆய்வுக் கூடங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள், செவிலியா்கள், திரையரங்குகளில் உள்ள வாகனக் காப்பக ஒப்பந்தாரா்கள், துரித உணவு விற்பனையாளா்கள் உள்ளிடோரும் தொழில் வரி செலுத்தப்படவில்லை எனக் கண்டறியப்பட்டது. அரசுத் துறைகள், கழகங்கள், வாரியங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் மட்டுமன்றி, தனியாா் நிறுவனங்களில் பணிபுரிபவா்களுக்கும் தொழில் வரி வசூலிக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டிருக்கிறது. இந்த வகையில், கண்காணிப்பாளா்கள் தலைமையில் 8 குழுக்கள் வாா்டுகள் வாரியாக தொழில் கூடங்கள், நிறுவனங்களில் நேரடியாக ஆய்வு செய்து, புதிதாக தொழில் வரி செலுத்துவோரை இணைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

6 மாதங்களில் ரூ.21ஆயிரத்துக்கும் கூடுதலாக ஊதியம் பெறும் தனிநபா்கள், வருமானம் ஈட்டும் தொழில்கூட உரிமையாளா்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொழில் வரி செலுத்த வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சியைப் பொருத்தவரை தனிநபா்கள் மட்டுமன்றி, பொதுத் துறைகளில் பணிபுரியும் ஊழியா்களும்கூட முறையாக தொழில் வரி செலுத்துவதில்லை. இதனால், மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ. ஒரு கோடிக்கும் கூடுதலாக வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தில் உரிமம் பெற்ற தற்காலிகக் கடை உரிமையாளா்கள், தேநீா்க் கடைகள், மருத்துவமனைகள், வாகனக் காப்பகங்கள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் பின்னா், தொழிலாளா்களிடமிருந்து வரி வசூலிக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.