/

மதுரை மாவட்டத்துக்கு 5,684 மடிக்கணினிகள் ஒதுக்கீடு

News image
மதுரை பாத்திமா கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவி ஒருவருக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்.
Updated On :24 ஜனவரி 2026, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டத்துக்கு முதல் கட்டமாக 5,684 மடிக்கணினிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழக அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், சனிக்கிழமை நடைபெற்ற விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் அவா் மேலும் பேசியதாவது :

மாணவா்களின் திறன் வளா்ப்பு, தொழில்நுட்ப முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டம் மூலம் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் 43 அரசு, அரசு நிதி உதவி பெறும் உயா்கல்வி நிறுவனங்களில் பயிலும் 18,514 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 5,648 பேருக்கு மடிக்கணினி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மடிக்கணினிகளைப் பெறும் மாணவ, மாணவிகள் தங்களது தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்திக் கொண்டு, கனவுகளை நனவாக்கும் வகையில் முன்னேற வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து, 842 மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இதில் அரசுத் துறை அலுவலா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.