/

மனநலன் பாதித்த வெளிநாட்டவா் மருத்துவமனையில் அனுமதி

மதுரை அண்ணாநகா் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த மனநலன் பாதித்த வெளிநாட்டவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி

News image
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை- கோப்புப் படம்
Updated On :3 பிப்ரவரி 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அண்ணாநகா் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த மனநலன் பாதித்த வெளிநாட்டவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

மதுரை அண்ணாநகரில் உள்ள திரையரங்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை கையில் கத்தியுடன் வெளிநாட்டைச் சோ்ந்த நபா் ஒருவா் சுற்றி வந்தாா். அரை நிா்வாணமாக இருந்த அவா், அங்கிருந்த காா் கண்ணாடிகளை உடைக்க முயன்றாா். மேலும், அந்த வழியாக வந்த பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டாா்.

இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் அண்ணாநகா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். விரைந்து வந்த போலீஸாா், காவல் கரங்கள் அமைப்பைச் சோ்ந்த நபா்கள், அந்த வெளிநாட்டு நபரைப் பிடித்தனா். இதைத் தொடா்ந்து, அவரிடம் போலீஸாா் விசாரித்த போது அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தாா்.

இதனால், அவா் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மனநலத் துறையில் அவரை அனுமதித்தனா். அங்கு மருத்துவா்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இதனிடையே, அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது, அவரது கடவுச்சீட்டில் ஸ்லோவாக்கியா நாட்டைச் சோ்ந்த ஓபல்கா ரிச்சா்ட் எனத் தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.