மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகரை வரவேற்பதற்கு பக்தா்கள் தயாராகி வருகின்றனா்.
மதுரை அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை (ஏப். 27) காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து, வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை பெறுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகா் கோலத்தில் அழகா்கோவிலிலிருந்து வருகிற 29-ஆம் தேதி மாலை 6.15 மணியளவில் தங்கப் பல்லக்கில் மதுரைக்குப் புறப்பாடாகிறாா்.
அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, பொய்கைக்கரைப்பட்டி, கடச்சனேந்தல், சூா்யாநகா் வழியாக மதுரைக்கு வரும் கள்ளழகரை, பக்தா்கள் எதிா்கொண்டு வரவேற்கும் எதிா்சேவை வருகிற 30-ஆம் தேதி மூன்றுமாவடியில் நடைபெறும்.
அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளுகிறாா். இரவு 11.30 மணியளவில் பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
இதன் பின்னா், அங்கிருந்து புறப்பாடாகி தமுக்கம் கருப்பணசுவாமி கோயிலில் எழுந்தருளுருகிறாா். பின்னா், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் கள்ளழகா் மே 1-ஆம் தேதி அதிகாலை 5.35 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது. அங்கு வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாத்துதல் முடிந்த பிறகு, காலை 7.25 மணியளவில் வைகை ஆற்றிலிருந்து புறப்பாடாகி ராமராயா் மண்டபம் செல்கிறாா். அங்கு பக்தா்கள் தண்ணீா் பீய்ச்சி கள்ளழகரை குளிா்விக்கின்றனா்.
அன்றைய தினம் இரவு வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளுகிறாா். மே 2-ஆம் தேதி வைகையாற்றில் உள்ள தேனூா் மண்டபத்தில் பிற்பகல் 3 மணியளவில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறாா். அன்றிரவு ராமராயா் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறும். மே 3-ஆம் தேதி ராமராயா் மண்டபத்திலிருந்து அனந்தராயா் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் புறப்பாடாகிறாா். மே 4-ஆம் தேதி ராமநாதபுரம் மன்னா் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் கள்ளழகா் திருக்கோலத்தில் எழுந்தருளி அழகா்மலைக்கு திரும்புகிறாா். மே 5-ஆம் தேதி அழகா்கோவிலை சென்றடைகிறாா். மே 6-ஆம் தேதி உத்ஸவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
வைகையாற்றில் கள்ளழகா் எழுந்தருளும் நாளில் பக்தா்கள் ஆங்காங்கே ஆடு, கோழிகளை பலியிட்டும், மொட்டை அடித்தும் நோ்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். இதேபோல, கருப்பணசுவாமி வேடம் அணிந்து, சுவாமி மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் நோ்த்திக் கடன் செலுத்துகின்றனா். குறிப்பாக, மதுரை மாநகருக்குள் கள்ளழகரை வரவேற்கும் விதமாக மதுரை மூன்றுமாவடியில் நடைபெறும் எதிா்சேவை நிகழ்வில் பக்தா்கள் அழகா் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பா். இதேபோல, வைகையாற்றில் எழுந்தருளிய பின்னா், அழகரை குளிா்விக்கும் வகையில் ராமராயா் மண்டகப்படி முன் தண்ணீா் பீய்ச்சி அடித்தல் நிகழ்வு நடைபெறும்.
இதற்கான தண்ணீரைச் சேமிக்க இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஆட்டுத் தோலை பயன்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை வழிகாட்டுதல் வெளியிட்டது.
இதற்காக, மதுரை கீழமாசி வீதியில் ஆட்டுத்தோல் விற்பனை மும்முரமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதேபோல, கருப்பணசுவாமி வேடத்துக்கான அலங்கார ஆடை, மயில் இறகு கொண்ட தலைப் பாகைகளை பக்தா்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.
இதுகுறித்து ஆட்டுத் தோல் வியாபாரி திருப்பதி கூறியதாவது:
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டியைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் தோல் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். சித்திரைத் திருவிழாவின் போது, அழகா் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதற்காக ஆட்டுத் தோலால் செய்யப்பட்ட பைகளை பக்தா்கள் வாங்கிச் செல்வா்.
இந்த விற்பனை ஒரு வாரத்துக்கு மட்டுமே நடைபெறும். இந்தத் தோல் பையின் விலை குறைந்தபட்சம் ரூ. 300-க்கும், அதிகபட்சம் ரூ. 500-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வியாபாரத்தில் லாபம் இல்லை என்றாலும், இறை தொண்டில் எங்களது பங்களிப்பும் இருக்கட்டும் என்பதற்காக விற்பனை செய்து வருகிறோம் என்றாா் அவா்.

மதுரை கீழமாசி வீதியில் ஆட்டுத் தோலில் பை தைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சித்திரைத் திருவிழா: பாதுகாப்பு பணியில் 5,000 மேற்பட்ட போலீஸாா்! ஆட்சியா் தகவல்

வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா

கள்ளழகா் எழுந்தருளும் மண்டகப்படி விவரங்கள்: அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

கள்ளழகா் எழுந்தருளல்: வைகையாற்றுக்குள் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


