தேனி மாவட்டத்தில் அரசு சிறப்புத் திட்டத்தில் பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் முதல் கட்டமாக ஊராட்சிப் பகுதிகளில் பயனாளிகளைத் தேர்வுசெய்து, விலையில்லா பொருள்கள் வழங்கப்படுகின்றன. போடி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் 4 கட்டமாக பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. போடி ஒன்றியம், அகமலையில் கடந்த ஜன.21 (சனிக்கிழமை) மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் அகமலை ஊராட்சிக்கு உள்பட்ட கண்ணக்கரை, ஊரடி, ஊத்துக்காடு, அண்ணாநகர், சொக்கனலை ஆகிய மலை கிராமங்களைச் சேர்ந்த 587 குடும்பத்துக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கினார்.