/

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு இல்லாத இலவச நீராவிக் குளியல்

ராமநாதபுரம், பிப். 16:    ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் செயல்பட்டு வரும் இலவச நீராவிக் குளியல் மற்றும் மசாஜ் செய்து கொள்ளும் மருத்துவம் குறித்து பொதுமக்களிடையே போதுமான வ

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:14 pm

சி.வ.சு. ஜெகஜோதி

ராமநாதபுரம், பிப். 16:    ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் செயல்பட்டு வரும் இலவச நீராவிக் குளியல் மற்றும் மசாஜ் செய்து கொள்ளும் மருத்துவம் குறித்து பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.

  ராமநாதபுரம் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் நடைப்பயிற்சி மேற்கொள்ளப் பயன்படும் கருவியான டிரெட்மில், கால்களுக்கு வலுவூட்டும் வகையில் பயிற்சி செய்யும் மின்சார மிதிவண்டி எனப்படும் ரெகுபைண்ட் பைக், பக்கவாதம் உள்பட வாத நோய்களையும் குணமாக்கிட உதவும் தொக்கணம் எனப்படும் மசாஜ் வைத்திய முறை, உடலின் உஷ்ணத்தைக் குறைத்து தோலை பளபளப்பாக்க உதவும் நீராவிக் குளியலுக்கான கருவி ஆகியன பல லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளன. இவை போதுமான பயன்பாடின்றி உள்ளன.

  உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பல கருவிகள் அரசு மருத்துவ

மனையில் இருப்பது பலருக்குத் தெரியாமலும், போதிய விழிப்புணர்வு இல்லாமலும் உள்ளது. இந்த வசதியை ஆண், பெண் இருபாலரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  உடலில் நரம்புகள், எலும்புகள், தசைகள் போன்றவற்றை வலுவூட்டப் பக்கத்து மாநிலங்களில் மசாஜ் என்ற பெயரில் பல ஆயிரங்களை வசூலிக்கும் நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவில் இலவசமாக இந்த வசதியை அரசு செய்து கொடுத்துள்ளது.

  இதன் மகத்துவத்தை உணர்ந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. அண்மையில் இங்கு நீராவிக் குளியல் செய்து கொண்டிருந்த தனபாலன் என்பவர் கூறியதாவது:

  நான் ஞாயிற்றுக்கிழமைதோறும் மசாஜ், நீராவிக் குளியல் செய்து கொள்கிறேன். மூலிகைத் தைலத்தை உடல் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்த பிறகு நீராவிக் குளியல்  செய்ய வைக்கின்றனர். இதனால் உடலில் உள்ள வலிகள் மறைந்து புத்துணர்வு கிடைக்கிறது என்றார்.

  இது குறித்து அரசு சித்த மருத்துவர்கள் வான்தமிழ் இளம்பருதி, புகழேந்தி ஆகியோர் கூறியதாவது:

  சித்த மருத்துவப் பிரிவில் புதிதாக துவங்கப்பட்டதுதான் மசாஜ் மற்றும் நீராவிக் குளியல் முறை மருத்துவம். டிரெட்மில் எனப்படும் நடைப்பயிற்சிக் கருவி, மின்சார மிதிவண்டி, உடலை தேவைக்கேற்ப பகுதி, பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ மசாஜ் செய்ய வரதராஜன் என்ற தொக்கணர் ஒருவரும் அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

  அரசு மருத்துவமனைக்கு வரும் அனைவரிடமும் இலவச நீராவிக்குளியல் மற்றும் மசாஜ் குறித்து பலமுறை சொல்லியும் இதன் மகத்துவம் பலருக்கும் தெரியவில்லை. மருத்துவமனை வளாகத்தில் விளம்பரப் பலகையும் வைத்துள்ளோம்.  மசாஜ் செய்து கொள்வதால் தசை பலமும், ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. முதுகுத் தண்டுவடத்தின் இருபுறமும் உள்ள தசை நார்களுக்கு தளர்வு ஏற்படுத்தி பின் வலுவூட்டப்படுகிறது.

  இந்த வைத்திய முறையில் கழுத்து வலி, கீழ் முதுகுவலி, பக்கவாதம் உள்ளிட்ட வாத நோய்கள் கூட விரைவாகக் குணமாகிவிடும். பிண்டத்தைலத்தை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்கிறோம்.

  மசாஜ் முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட நபரை நீராவிக் குளியலுக்கு உட்படுத்துவதால் அவரது தோலில் உள்ள நுண்ணிய ரத்தக் குழாய்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் சீராகிறது.

உடலின் வெளிப்புற அழுக்குகள் குறைந்து தோல் பளபளப்பாக மாறுவதுடன் இனம் புரியாத ஒரு வகையான புத்துணர்வும், ஆனந்தமும் கிடைக்கும்.

  இத்தகையை மருத்துவச் சிகிச்சையை இலவசமாக செய்ய சித்த மருத்துவப் பிரிவு தயாராக உள்ளது. பொதுமக்கள்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.