இணைப்புச் சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படுமா?
தேனி, ஜூலை 5:தேனி மாவட்டத்தில் இருந்து கேரளம் மற்றும் விருதுநகர் மாவட்டத்துக்கு எளிதாக செல்லும் வகையில் இணைப்புச் சாலை திட்டங்களைச் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத


தேனி, ஜூலை 5:தேனி மாவட்டத்தில் இருந்து கேரளம் மற்றும் விருதுநகர் மாவட்டத்துக்கு எளிதாக செல்லும் வகையில் இணைப்புச் சாலை திட்டங்களைச் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்வதற்கு குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு, சாக்கலூத்து மெட்டு, டாப்-ஸ்டேசன் ஆகிய பகுதிகள் வழியாக சாலை வசதிகள் உள்ளன. இவற்றில் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாக்கலூத்து மெட்டு, டாப்-ஸ்டேசன் வழியாக வனத் துறைக்குச் சொந்தமான இடம் குறுக்கிடுவதால் மண் தரையாக உள்ளது.
சாக்கலூத்து மெட்டுச் சாலை: உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் ஆகிய பகுதிகளில் இருந்து கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக கேரளம் செல்ல 70 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும். ஆனால், தேவாரத்தில் இருந்து சாக்கலூத்து மெட்டு வழியாக கேரளத்தின் இடுக்கி மாவட்டத்துக்குச் செல்ல 18 கி.மீ. தூரம்தான். இதில், தேவாரத்தில் இருந்து சாக்கலூத்து மலையடிவாரம் வரை 7 கி.மீ. தூரம் வனத் துறைக்குச் சொந்தமானதாகும்.
சாக்கலூத்துமெட்டில் இருந்து நெடுங்கண்டம், உடும்பன்சோலை வரை கேரள அரசு சாலை வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, தேவாரம் அருகில் டி.மேட்டுப்பட்டியில் இருந்து சாக்கலூத்து மலையடிவாரம் வரை 2 கி.மீ. தூரத்துக்கு தமிழக அரசு சாலை மற்றும் பாலங்களை அமைத்துள்ளது. இடைப்பட்ட வனத் துறை இடத்தில் மட்டும் தான் சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை.
டாப்-ஸ்டேசன் சாலை: போடி வட்டாரத்தில் உள்ள டாப்-ஸ்டேசன் பகுதியிலிருந்து 20 கி.மீ. தூரம் பயணம் செய்து மூணாறு செல்லலாம். தமிழகப் பகுதியில், குரங்கனி-டாப் ஸ்டேசனுக்கு இடையே 9.2 கி.மீ. தார்ச் சாலை அமைக்க ஊரக வளர்ச்சி முகமை மூலம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. மேலும், 9.2 கி.மீ. தூரமுள்ள கன்னக்கரை-மருதையனூர் சாலை, 5 கி.மீ. தூரமுள்ள குரங்கனி-பிச்சங்கரை சாலை, 8 கி.மீ. தூரமுள்ள வலசத்துறை-அத்தியூத்து சாலை ஆகிய இணைப்புச் சாலைகள் அமைக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த இணைப்புச் சாலை திட்டங்களுக்கு வனத் துறை அனுமதி வழங்காததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
காமராஜபுரம்-கிளவன்கோயில் சாலை:ஆண்டிபட்டி வட்டாரம், வருசநாடு பகுதியில் இருந்து காமராஜபுரம், கிளவன்கோயில் வழியாக 18 கி.மீ. தூரத்தில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புக்குச் செல்வதற்கு பாதை உள்ளது. தற்போது ஆண்டிபட்டியில் இருந்து விருதுநகர் மாவட்டத்துக்குச் செல்ல உசிலம்பட்டி வழியாக 70 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
2002-ல் காமராஜபுரம்-கிளவன்கோயில் இணைப்புச் சாலை திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கியது. பாரதப் பிரதமர் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் காமராஜபுரம்-கிளவன்கோயில் இடையே 2.6 கி.மீ. தூரம் சாலை அமைப்பதற்கு ரூ.72.40 லட்சம், விருதுநகர் மாவட்ட பகுதியில் இருந்து 9.8 கி.மீ. தூரம் சாலை அமைப்பதற்கு ரூ.4.31 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதன்படி, 2003-ல் ரூ.41 லட்சம் செலவில் காமராஜபுரம் பகுதியில் 1.5 கி.மீ. தூரம் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், தேனி-விருதுநகர் மாவட்டங்களுக்கு இடையே உள்ள 8.5 கி.மீ. தூரப் பாதை, வனத் துறை இடத்தில் அமைந்துள்ளதால், அங்கு சாலை அமைக்க வனத் துறை அனுமதி வழங்கவில்லை.
தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கும், விருதுநகருக்கும் குறைந்த தூரத்தில் பயணம் செய்வதற்கான சாலை வசதியை ஏற்படுத்த வாய்ப்பிருந்தும், வனத் துறை அனுமதி வழங்காதது, அரசு நிதி ஒதுக்கீட்டில் கால தாமதம் போன்றவற்றால், இணைப்புச் சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இப்பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், இந்த இணைப்புச் சாலை திட்டங்களைச் செயல்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...