/

ஜல்லிக்கட்டு: இந்த ஆண்டு காளைகள் பாயுமா?

மதுரை, டிச. 22: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் திடீர் அறிவிப்பால், தமிழர்களின் தொன்மையானதும், வீர விளையாட்டுமான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுமா, நடைபெறாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. விலங்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 7:30 pm

ப. இசக்கி

மதுரை, டிச. 22: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் திடீர் அறிவிப்பால்,

தமிழர்களின் தொன்மையானதும், வீர விளையாட்டுமான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுமா, நடைபெறாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் பயிற்சி மற்றும் காட்சிப்படுத்துதலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, குரங்கு ஆகிய மிருகங்களின் பட்டியலில் காளை மாடும் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

 பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரியில் தொடங்கி மே வரை ஜல்லிக்கட்டு நடைபெறும். 400 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த விளையாட்டின்போது, மாடுகளை அடக்கும் இளைஞர்களில் சிலர் இறப்பதும், அதிகமானவர்கள் காயமடைவதும், மாடுகளைத் துன்புறுத்துவதாகக் கூறப்பட்டதும் சர்ச்சையைக் கிளப்பியது.

 2006-ல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தொடர்ந்த மேல்முறையீடு மூலம் தடை நீக்கப்பட்டது.

 இதனிடையே, மத்திய விலங்குகள் நல வாரியம், இப் பிரச்னையை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றது. மிருகங்கள் வதை செய்யப்படுவதோடு, பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதால் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் எனக் கோரியது. அதனை ஏற்று 2007-ல் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது.

 இந்தத் தடை, ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்ட விளையாட்டு ஆர்வலர்களிடையே   கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 2008 ஜனவரியில் தடை நீக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. எனினும், ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்துவதற்கு விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரிவித்தது.

  இப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில், தமிழக அரசானது, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தை 2009-ல் இயற்றியது. அந்த சட்டத்தின்படி, ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அந்த நிபந்தனைகளை ஏற்று, கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தி வந்தனர்.

  2007-ல் உச்ச நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த  தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி. ராஜசேகரன் தொடர்ந்த வழக்கின்  இறுதிக்கட்ட விசாரணை அடுத்த ஆண்டு ஜூனுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் கடந்த ஜூலையில் வெளியிட்ட அறிவிப்பில், விலங்குகள் வதை தடைச் சட்டத்தின் கீழ் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, குரங்கு, காளை மாடு ஆகியவற்றுக்குப் பயிற்சி அளிக்கவும், அவற்றை காட்சிப்படுத்தவும் தடை விதித்தது. இதனால், ஜல்லிக்கட்டில் காளை மாடுகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு சுமார் 450 முதல் 500 காளை மாடுகள் தயாராக உள்ள நிலையில், இதை மறைமுகமான தடையாக விளையாட்டு ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

 "வீட்டில் வளர்க்கப்படும் கோயில் காளைகள்தான் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படுகின்றன. அவற்றை காட்டு மிருகங்கள் எனக் கூறி தடை செய்துள்ளதை ஜீரணிக்க முடியவில்லை. யானைக்கு தடை விதிக்கவில்லை. இது தமிழர்களின் கலாசாரத்தை அழிக்கும் முயற்சி. ஜல்லிக்கட்டு என்பது தெய்வ நம்பிக்கையில் நிகழ்த்தப்படும் வீர விளையாட்டு. அதை நடத்தாவிட்டால், தெய்வக் குற்றம் ஏற்படும். விவசாயம் செழிக்காது, மக்களுக்கு நோய் பரவும் என கிராம மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, தமிழர்களின் தொன்மை, கலாசாரம், தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடைய ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்' என்றார் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்து வருபவர்களில் ஒருவரான பாலாஜி.

 மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அவணியாபுரத்தில் தை 1-ல் (ஜன. 15), பாலமேட்டில் தை 2-ல் (ஜன.16), அலங்காநல்லூரில் தை 3-ல் (ஜன. 17)  நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான ஆயத்தக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் கூட்டப்பட்டது.

அப்போது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடை ஆணை கிடைக்கப் பெற்றதால், அந்தக் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆணை குறித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் ஆட்சியர் எடுத்துக் கூறினார். அதற்கு அவர்கள் ஆட்சேபம் தெரிவித்து, ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரினர். அவர்களது கருத்தை அரசுக்குத் தெரிவிப்பதாக ஆட்சியர் கூறி, கூட்டத்தை முடித்தார்.

 "இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்கவில்லை. ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கக் கோரியுள்ளோம். இம் மாவட்ட எம்.எல்.ஏ.க்களிடம் முறையிட்டுள்ளோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 எம்.பி.க்களிடம் கையெழுத்து பெற்று பிரதமர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரிடம் அளித்துள்ளோம். எனவே, மத்திய அரசு அறிவித்துள்ள பட்டியலிலிருந்து காளை மாட்டை நீக்க வேண்டும்.' என்றார் ராஜசேகரன்.

திமுக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டை இப்போது அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தினால் ஆட்சிக்கும், முதல்வருக்கும் கெட்ட பெயர் ஏற்படும் எனக் கூறி, ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த இம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

"ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கருத்தை அரசுக்கு அனுப்பியுள்ளோம். அரசு முடிவின்படி மாவட்ட நிர்வாகம் செயல்படும்.' என்றார் மதுரை மாவட்ட ஆட்சியர் உ. சகாயம்.

ஜல்லிக்கட்டில் காளை மாட்டைப் பயன்படுத்த தடை விதிக்கும் மத்திய அரசின் அறிவிப்பானது, தமிழக ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தைக் கட்டுப்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 எனவே, சட்ட நிபுணர்களின் கருத்தை அறிந்து, அரசு இதில் நல்லதொரு முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கையில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கத் துடிக்கும் இளைஞர்களும், மாடுகளைத் தயார்படுத்தி வருவோரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.