டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

குறையும் விமான சேவையால் அதிகரிக்கும் கட்டணம்

மதுரை, செப்.15:  மதுரை விமான நிலையத்தில் கடந்த ஆண்டைவிட 5 விமான சேவை நடப்பாண்டில் குறைந்ததால் விமானக் கட்டணம் இருமடங்காகிவிட்டது என பயணிகள் கூறுகின்றனர்.  மதுரை விமான நிலையம் 1957-ல் இருந்து செயல்பட்ட

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:31 pm

ஜெயப்பாண்டி

மதுரை, செப்.15:  மதுரை விமான நிலையத்தில் கடந்த ஆண்டைவிட 5 விமான சேவை நடப்பாண்டில் குறைந்ததால் விமானக் கட்டணம் இருமடங்காகிவிட்டது என பயணிகள் கூறுகின்றனர்.

 மதுரை விமான நிலையம் 1957-ல் இருந்து செயல்பட்டாலும், 1960 முதலே வணிக ரீதியாக சேவை விமானங்கள் இயங்கி வருகின்றன. மதுரையிலிருந்து தற்போது சென்னை, பெங்களூர், மும்பை ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை உள்ளது.

   கடந்த ஆண்டில் மதுரை விமான நிலையத்தில் தினமும் 11 விமானங்கள் வந்து சென்றன. காலை, மாலை, இரவு என எந்த நேரமும் விமான சேவை இருந்ததால் தென் மாவட்ட தொழிலதிபர்கள் ஏராளமானோர் இங்கு வந்து சென்றனர்.

 இந்த விமானங்கள் மூலம் 2008 ஆம் ஆண்டில் 3,58,806 பயணிகள் சென்றுள்ளனர். தினமும் குறைந்தது 500 பேராவது மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்றுவந்தனர். மேலும், மல்லிகைப்பூ உள்ளிட்டவையும் வெளியூர்களுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

   கடந்த ஆண்டிலும் இதே அளவுக்கு பயணிகள் பயணித்து உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு சுமார் 8,600 தடவைக்கும் மேலாக விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் இறங்கிச் சென்றதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

   மதுரை நகரில் தரமான கண் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவ வசதிகளும், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில், திருமலைநாயக்கர் மகால் போன்ற வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்கள் இருப்பதாலும், ராமேசுவரம், கன்னியாகுமரி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் வழியாக மதுரை விளங்குவதாலும் ஏராளமான வெளிநாட்டவரும் விமானம் மூலம் மதுரை வருவது  அதிகரித்து உள்ளது.

   இந்த நிலையில்தான் மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்கம், இந்திய தொழில் கூட்டமைப்பு உள்ளிட்டவை கோரிக்கை விடுத்தன.

 மதுரை விமான நிலையத்தின் ஓடுதளத்தை 6 ஆயிரம் அடி நீளத்திலிருந்து 12 ஆயிரம் அடியாக உயர்த்தவும், விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. தற்போது ஓடுதளம் 7 ஆயிரம் அடியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் | 130 கோடியில் புதிய முனையமும் அண்மையில் கட்டிமுடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

   இத்தகைய நவீன வசதிகள் அமைக்கப்பட்ட நிலையில் விமான சேவை குறைந்துள்ளது. மதுரை -சென்னை இடையே இயக்கப்பட்ட ஒரு தனியார் விமான சேவை கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது மதுரை விமானநிலையத்திலிருந்து தினமும் 6 விமானங்கள் மட்டுமே இயங்கிவருகின்றன.

   கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 5 விமான சேவைகள் குறைந்த காரணத்தால் விமான சேவையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 11 விமானங்கள் மூலம் சென்ற பயணிகள் தற்போது 6 விமானங்கள் மூலம் செல்லவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

  மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல இரு மாதங்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்தால் கட்டணம் | 2400 லிருந்து | 3000 வரை இருந்தது. பயணத் தேதி நெருங்க, நெருங்க இந்தக் கட்டணம் அதிகமாகும். அதிகபட்சமாக கடந்த ஆண்டு மதுரையிலிருந்து சென்னை செல்ல | 8 ஆயிரம் வரைதான் விமான கட்டணம் இருந்துள்ளது.

   ஆனால், தற்போது ஒருமாத இடைவெளியில்கூட சென்னைக்கு விமான டிக்கெட் கிடைக்கவில்லை என பயணிகள் கூறுகின்றனர். அப்படியே கிடைத்தாலும் டிக்கெட் கட்டணம் | 9 ஆயிரத்திலிருந்து | 14 ஆயிரம் என கூடுதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் அவர்களது குற்றச்சாட்டாகும்.

   தூத்துக்குடியிலிருந்து தினமும் சென்னைக்கு ஒரே ஒரு விமான சேவைதான் உள்ளது. இந்த விமானத்தில்கூட கடைசி நேரத்தில் அதிகபட்சமாக | 11 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் உள்ளது. ஆனால், மதுரையிலிருந்து சென்னைக்கு  | 12 ஆயிரத்துக்கும் மேலாக கட்டணம் வசூலிப்பது சரியல்ல என்பதே பயணிகள் கருத்தாகும்.

 இதுகுறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி கி.சங்கையாபாண்டியனிடம் கேட்டபோது,

   வரும் 27-ம் தேதி முதல் மதுரையிலிருந்து 2 விமான சேவை கூடுதலாகத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விமான பயணக் கட்டணம் என்பது முன்பதிவு செய்யும் காலநேரத்தைப் பொருத்தே அமையும் என்றனர்.    தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேலுவிடம் கேட்டபோது, மதுரை விமான நிலையத்தை தமிழக அரசு சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தியுள்ளது. புதிய முனையத் திறப்பு விழாவில் வெளிநாட்டு விமான சேவையை மதுரையில் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதை மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மு.க.அழகிரி மற்றும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல்படேல் ஆகியோர் ஏற்றுள்ளனர். எனவே விரைவில் மதுரையில் வெளிநாடு விமான சேவை தொடங்கினால், விமானப் பயணக் கட்டணமும் குறையும் என்றார்.

   மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கும் நிறுவனங்களை அழைத்து சென்னையில் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 17) தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்கம் சார்பில் நடத்தப்பட உள்ளது.

   மதுரை விமான நிலையத்தின் கட்டட தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்தியிருக்கும் நிலையில், விமானக் கட்டணத்தை குறைப்பதற்கும், விமானத்தில் பயணிப்போருக்கு வசதியாக கூடுதல் விமான சேவையை ஏற்படுத்தவும் தமிழக அரசும், மத்திய அமைச்சர்களும் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்போதைய தேவையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.