பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையம்
ராமநாதபுரம், ஜூலை 18: ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த புறக்காவல் நிலையம், கடந்த 6 மாதங்களாக பூட்டியே இருப்பதால் பொதுமக்கள், அரசு மருத்துவமனை ஊழியர்கள் பலரும் அவதிக்குள்ளாகி வருக


ராமநாதபுரம், ஜூலை 18: ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த புறக்காவல் நிலையம், கடந்த 6 மாதங்களாக பூட்டியே இருப்பதால் பொதுமக்கள், அரசு மருத்துவமனை ஊழியர்கள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் புறக்காவல் நிலையம், மருத்துவமனை நுழைவு வாயிலின் இடதுபுறத்தில் உள்ள காத்திருப்போர் கூடத்தில் உள்ள ஓர் அறையில் செயல்பட்டு வந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏற்கெனவே இருந்த ஜெ.ராஜேந்திரன் இதைத் திறந்து வைத்து, அங்கு எப்போதும் ஒரு காவலர் பணியில் இருக்குமாறு செய்தார். இக்காவல் நிலையம் ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தின் மேற்பார்வையில் செயல்பட்டு வந்ததால், அங்கு பணிபுரியும் காவலர்களில் யாரேனும் ஒருவர் இங்கு 24 மணி நேரமும் பணியில் இருந்தனர்.
வயர்லெஸ் கருவி இணைப்புடன் இப் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. அரசு
மருத்துவமனை வளாகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டால், உடனுக்குடன் வயர்லெஸ் கருவி மூலம் தொடர்பு கொண்டு போலீஸôர் வரவழைக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வந்தது.
விபத்தில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் நபர் பற்றிய விவரங்கள் அல்லது தகராறுகள் மூலம் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு வருபவர்களைப் பற்றிய விவரங்கள் மருத்துவமனை ஊழியர்கள் மூலமாக புறக்காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்படும்.
எந்த ஊரில் சம்பவம் நடந்ததோ அந்த இடத்துக்குரிய போலீஸôர் தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்து தகுந்த நடவடிக்கை எடுக்கவும் புறக்காவல் நிலையம் பேருதவியாக இருந்தது.
இப்போது காவல் நிலையம் செயல்படாமல் இருப்பதால் அரசு மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் வருவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. போலீஸôரின் வேண்டுகோள் கடிதம் கொடுத்த பிறகே பிரேத பரிசோதனைகள் செய்ய வேண்டியிருப்பதால், அதற்கும் காலதாமதம் ஆகிறது. இதனால் அரசு மருத்துவமனையிலேயே போலீஸôருக்காக பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
புறக்காவல் நிலையம் பூட்டியே இருப்பதால், மருத்துவமனை ஊழியர்களும் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று தகவல் தெரிவிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதுடன், தகவல்களை மருத்துவமனையில் இருந்து காவல் நிலையங்களுக்கு உடனடியாக தெரிவிக்கவும் தாமதம் ஆகிறது.
எனவே, இக்காவல் நிலையம் விரைவில் திறக்கப்பட வேண்டும். தொலைபேசி வசதி மற்றும் வயர்லெஸ் கருவி வசதிகளுடன் காவல் நிலையம் செயல்படுவதுடன், 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் காவலர்களும் நியமிக்கப்பட வேண்டும்
என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு தினசரி 1500 வெளிநோயாளிகள்
வருவதாலும், சுமார் 600க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் இருப்பதாலும் புறக்காவல் நிலையம் இருப்பது மிகவும் அவசியம். இரவு நேரங்களில் இப்புறக்காவல் நிலையம்
இருக்கும் இடத்தில் எவ்வித விளக்கு வசதியும் இல்லை. அதே போல புறக்காவல்
நிலையத்துக்கு இடதுபுறத்தில் உள்ள காத்திருப்போர் கூடம், வலதுபுறத்தில் உள்ள தகவல் மையம் ஆகியனவும் எப்போதும் பூட்டியே கிடக்கின்றன. அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருப்பதால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு, அவசர, அவசியம் கருதி புறக்காவல் நிலையம் உடனடியாக செயல்பட தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
நகர் காவல் நிலையத்தின் மேற்பார்வையில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு
வந்தாலும், மொத்தம் 45 பேர் பணியில் இருக்க வேண்டிய காவல் நிலையத்தில் 33 பேர் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். 12 இடங்கள் காலியாக உள்ளது. இருக்கிற 33 பேரிலும் 26 பேர் சோதனைச்சாவடி, நெடுஞ்சாலை ரோந்துப் பணி வாகனம், இரு சக்கர வாகனத்தில் ரோந்துப் பணி போன்ற பல்வேறு பணிகளுக்குச் சென்று விடுகிறார்கள். மீதம் இருக்கிற 7 பேரில் 5 பேர் பெரும்பாலும் ஏதேனும் ஒரு காரணத்தால் விடுப்பு எடுத்துவிடுகின்றனர். இத்தனையும் போக காவல் நிலையத்தில் பணியில் இருப்பவர்கள் 2 பேர் மட்டுமே. புறக்காவல் நிலைய பணிக்கு 24 மணி நேரத்துக்கு 3 பேர் தேவைப்படுவதால்தான் பூட்டிப்போட வேண்டிய நிலை
ஏற்பட்டிருக்கிறது. காவலர்கள் பற்றாக்குறையால் தான் புறக்காவல் நிலையம் பூட்டப்பட்டுக் கிடக்கிறது. நகரில் பிரதான சாலையில் பெயருக்குத்தான் காவல் நிலையம் என்று இருக்கிறதே தவிர போதிய போலீஸôர் இல்லை என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...