ராமநாதபுரத்தில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்
ராமநாதபுரம்,பிப்.14: ராமநாதபுரத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள், பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தொடரும் கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்கள் மத்திய


ராமநாதபுரம்,பிப்.14: ராமநாதபுரத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள், பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தொடரும் கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகேயுள்ள அச்சடிப்பிரம்பு கிராமத்தில் சந்திரசேகரன்(40) என்பவரது வீட்டில் கடந்த 19.9.09 அன்று 35 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளிக் கொலுசுகள் உள்பட மொத்தம் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
அதேநாளில், ராமநாதபுரம் பாரதி நகரில் காய்கறி வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 5 பவுன் தங்கச் சங்கிலியை பைக்கில் வந்த இருவர் பறித்துக்கொண்டு தலைமறைவாயினர்.
ராமநாதபுரம் சேதுபதி நகரில் கடந்த 5.10.2009 அன்று பூட்டியிருந்த காசிம்முகம்மது(36) என்பவரது வீட்டின் கதவுகளை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், செல்போன் உள்பட மொத்தம் ரூ.30ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளைபோயின.
இச்சம்பவம் நடந்த மறுநாளே ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் வசிக்கும் முத்துராமனின் மனைவி செண்பகவள்ளியின் வீட்டில் இருந்த
ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
கடந்த 8.10.2009 அன்று திருப்புல்லாணி அருகே இளங்காமணி கிராமத்தைச் சேர்ந்த செல்வராணியின் வீட்டில் இருந்த ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 17.5 பவுன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து 23.10.2009 அன்று ராமநாதபுரம் சேட் இப்ராகிம் நகரில் வசிக்கும் பிரபல மருத்துவருக்குச் சொந்தமான பூட்டியிருந்த வீட்டின் ஜன்னல் கம்பிகளை வெல்டிங் வைத்து அறுத்து வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த ரூ.65 லட்சம் மதிப்பிலான 517 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.
இம்மாதம் 11-ம் தேதி ராமநாதபுரம் வைகை நகர் கிழக்கு கருகப்பிள்ளைக்காரத் தெருவில் வசிக்கும் பாலமுருகன்(35) என்பவரது வீட்டில் முகமூடி அணிந்த 3 பேர் அதிகாலையில் வீட்டின் காம்பவுண்டு சுவர் வழியாக குதித்து அங்கிருந்த பெண்களைத் தாக்கி 28 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம், செல்போன் உள்பட மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
தொடர்ந்து கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு சம்பவத்திலும் போலீஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தும் இதுவரை குற்றவாளிகள் யாரையும் காவல்துறை கைது செய்ததாகத் தெரியவில்லை.
வரும் பங்குனி, சித்திரை மாதங்கள் தொடர்ந்து திருவிழாக் காலங்களாக இருப்பதால் போலீஸôரின் கவனம் முழுவதும் திருவிழாப் பக்கமே திரும்பிவிடாமல் குற்றவாளிகள் நடமாட்டத்தையும் கண்காணித்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வெளியூர்வாசிகள்தான் தொடர்ந்து பகல் நேரங்களில் வசதியான வீடுகளை நோட்டமிடுகின்றனர். தனி வீடாகவும், ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியாகவும் தேர்வு செய்து கொள்ளையில் ஈடுபடுகின்றனர். போலீஸôர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டாலும் பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முக்கியமாக பீரோவைப் பூட்டிவிட்டு அதன் சாவியை பீரோவிற்கு மேலே வைப்பதை தவிர்க்கவேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...