/

மணல் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

விருதுநகர், டிச. 12:விருதுநகர் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:32 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர், டிச. 12:விருதுநகர் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திலும், வைப்பாறு, கெüசிகா ஆற்றுப் படுகைகளிலும் தொடர்ந்து டிராக்டர்களில்  மணல் கடத்திச் செல்லப்படுகிறது.

 இதனால் சேத்தூர், தளவாய்புரம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பு, சாத்தூர், வெம்பக்கோட்டை, தம்பிப்பட்டி, வத்திராயிருப்பு, மகராசபுரம், விருதுநகர், ஆமத்தூர், செங்குன்றாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து வருகின்றன.

தற்போது பெய்துவரும் மழையால் ஆறுகளில் தண்னீர் வரத்து அதிகரித்து, ஆற்றுப் படுகைகளில் மணல் அதிகளவில் காணப்படுகிறது. இதையடுத்து டிராக்டர்கள் மூலம் மணலை அள்ளிச் செல்வதும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி, திருச்சுழி பகுதிகளில் டிராக்டரை ஏற்றி சில அதிகாரிகளைக் கொலை செய்ய முயற்சித்த சம்பவங்களால், மணல் திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குவதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.முருகன் கூறியதாவது:மணல் கடத்துபவர்கள், அதிகாரிகள் வருவதைக் கண்காணிக்க வைப்பாறு, விஜயகரிசல்குளம், கோட்டையூர் முக்குச்சாலைகளில் ஆள்களை நிறுத்தி வைத்துள்ளனர். அதிகாரிகள் வந்தால் அதுகுறித்து உடனடியாக டிராக்டர் ஓட்டுநருக்கு செல்போன் மூலம் தகவல் அளிக்கப்படுகிறது. இதையடுத்து டிராக்டரில் உள்ள மணலை கீழே கொட்டிவிட்டுத் தப்பிச் செல்கின்றனர்.

ஆற்றில் உள்ள மணலை அதிகளவில் அள்ளுவதால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது என்றார்.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:மணல் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பலமுறை மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மணல் கடத்தலைத் தடுத்து நிறுத்தும் வகையில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கனிம வளத் துறையினர் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.