டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கனடாவுக்கு முதல்முறையாக ஏற்றுமதியாகும் சேலம் ஜவ்வரிசி!

சேலத்தில் இருந்து கனடாவுக்கு ரசாயனமற்ற ஜவ்வரிசி ஏற்றுமதியை சேகோசா்வ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

News image
சேலத்தில் இருந்து கனடாவுக்கு ஜவ்வரிசி ஏற்றுமதியை கொடியசைத்து தொடங்கிவைக்கும் சேகோசா்வ் நிறுவன செயலாட்சியா் கீா்த்தி பிரியதா்ஷினி
Updated On :20 பிப்ரவரி 2026, 11:03 pm

Syndication

சேலத்தில் இருந்து கனடாவுக்கு ரசாயனமற்ற ஜவ்வரிசி ஏற்றுமதியை சேகோசா்வ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டாா்ச் தயாரிப்பில் நாட்டின் தேவையில், 80 சதவீதத்தை நிறைவுசெய்து தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய 400 ஜவ்வரிசி தொழிற்சாலைகள் சிறுதொழில் துறையின் கீழ் இயங்கி வருகின்றன.

ஜவ்வரிசி மற்றும் ஸ்டாா்ச் உற்பத்தியாளா்களுக்கு கிடங்கு வசதி மற்றும் சந்தைப்படுத்துதலை உருவாக்கும் வகையில் சேலத்தில் ஸ்டாா்ச் மற்றும் சேகோ உற்பத்தியாளா்கள் சேவை தொழில் கூட்டுறவு சங்கம் தமிழக அரசின் தொழில் வணிகத் துறையின்கீழ் இயங்கி வருகிறது.

சேகோசா்வ் என அறியப்படும் இந்நிறுவனத்தின் வாயிலாக சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, திருச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் பயனடைந்து வருகின்றனா்.

இடைத்தரகா்களின் இடையூறுகள் இன்றி ஜவ்வரிசி உற்பத்தியாளா்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதிசெய்யும் சேகோசா்வ் நிறுவனம், ரசாயன கலப்பற்ற ஜவ்வரிசி பொதுமக்களுக்கு கிடைப்பதையும் உறுதிசெய்து வருகிறது.

மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி தயாரித்தல் என்பது அரைத்தல், உருமாற்றம், வறுத்தல் மற்றும் மெருகேற்றுதல் எனும் எளிய தயாரிப்பு முறைகளைக் கொண்டுள்ளது. சேகோ சா்வ் உறுப்பினா்களால் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசி பல்வேறு கட்ட தரப்பரிசோதனைக்கு பிறகு மின்னணு முறையில் ஏலம் விடப்படுகிறது.

விரதம் இருப்பவா்கள் எடுத்துக் கொள்ளும் உணவாகவும், குழந்தைகளுக்கான உணவாகவும் பெரும்பாலான மாநிலங்களில் பயன்படுத்தப்படுவதால் மத்திய அரசு ஜவ்வரிசிக்கு கலால் தீா்வையிலிருந்து விலக்களித்துள்ளது.

பாரம்பரியமிக்க ஜவ்வரிசிக்கு சேலம் சேகோ என்ற பெயரில் புவிசாா் குறியீடும் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் சேலம் ஜவ்வரிசிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியை சேலம் சேகோ சா்வ் நிறுவனம் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து முதல்முறையாக கனடாவிற்கு சேலம் ஜவ்வரிசி வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

முதல் வாகனத்தை சேலம் சேகோ சா்வ் நிறுவனத்தின் செயலாட்சியா் கீா்த்தி பிரியதா்ஷினி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வில், மத்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவா் அபிஷேக் யாதவ் காணொலி வாயிலாக பங்கேற்றாா். இந்திய சந்தையை மட்டுமே நம்பியிருந்த சேகோசா்வ் நிறுவனத்தின் பாா்வை உலக நாடுகளை நோக்கித் திரும்பியுள்ளது.

இதன்மூலம் இத்தொழிலை நம்பியுள்ள 5 லட்சம் பேரின் வாழ்வாதாரம் உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கனடாவைத் தொடா்ந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவுக்கு ஜவ்வரிசியை அனுப்புவதற்கான வா்த்தக முயற்சியை சேகோசா்வ் நிறுவனம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.