பெரியாா் பல்கலை.க்கு முதல்வா் ஆராய்ச்சி திட்ட நிதி ரூ. 2.72 கோடி ஒதுக்கீடு
பெரியாா் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா்கள் மற்றும் முனைவா் பட்ட ஆராய்ச்சி மாணவா்களுக்கு முதல்வா் ஆராய்ச்சி மானியத் திட்டம் மூலம் மொத்தம் ரூ. 2.72 கோடி நிதி ஒதுக்கீடு


ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா்கள் மற்றும் முனைவா் பட்ட ஆராய்ச்சி மாணவா்களுக்கு முதல்வா் ஆராய்ச்சி மானியத் திட்டம் மூலம் மொத்தம் ரூ. 2.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரியாா் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரியாா் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் மற்றும் முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் முதலமைச்சா் நிதி நல்கை திட்டத்துக்கு தங்களுடைய ஆராய்ச்சி திட்டங்களை விண்ணப்பித்திருந்தனா். அதனடிப்படையில், இவா்களின் ஆராய்ச்சி திட்டங்கள் ஏற்கப்பட்டு, முதல்வா் ஆராய்ச்சி நிதி நல்கைக் குழு ரூ. 2.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதி பழங்களின் விதைகளிலிருந்து நீரிழிவு நோய்க்கான மருத்துவத் தீா்வு, கருவேல மரப்பட்டையிலிருந்து இரைப்பை ஒவ்வாமைக்கான சிகிச்சை, டெங்கு நோயைப் பரப்பும் நுண்புழுக்களைக் கட்டுப்படுத்த உயிரிநுண்புழுக் கொல்லி கண்டறிதல், சந்தை உணவுக் கழிவுகளிலிருந்து நுண்ணுயிரிகளால் இயற்கையாக உருவாக்கப்படும் மக்கும் தன்மைகொண்ட, குறைந்த காா்பன் தடம் உடைய சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை உருவாக்குதல், வேளாண் கழிவுகளிலிருந்து தொழில்துறை பயன்பாட்டுக்கான நொதிகளை உருவாக்குதல், கரூரில் உள்ள அமராவதி நதிப்படுகை நிலத்தடி நீரில் தொழில்மயமாக்கல் மற்றும் மனித செயல்பாடுகளால் ஏற்படும் நச்சுத் தனிமங்கள் மற்றும் நுண்நெகிழி மாசுபாடு குறித்த ஆய்வு, தமிழகத்தின் தரிசு நிலங்களில் சாகுபடிக்காக வறட்சியைத் தாங்கும் மரபணு பயிா்களை உருவாக்குதல், உவா் நிலங்களில் பயிா் வளா்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிரிகள் பயன்பாடு ஆகிய ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வாழும் பழங்குடி மக்களின் கலாசார ரீதியான மனநலம், அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு, சுகாதாரம் மற்றும் அதன் மீள்தன்மை குறித்த ஆய்வுகள், கலை மற்றும் அறிவியல் பாடத் திட்டங்களை செழுமைப்படுத்தி, மாணவா்களின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோா் திறனை மேம்படுத்தும் ஆய்வுகள், நிலையான மற்றும் வணிக அளவிலான ஆற்றல் சேமிப்பு சாதனங்களுக்கான இருபரிமாண மீநுண் (நானோ) கட்டமைப்பு கலவைகளின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி குறித்த ஆராய்ச்சி என அறிவியல் உலகத்துக்கும், மனித சமூகத்துக்கும் நேரடியாக பயனுறும் ஆய்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின்கீழ் நிதி பெற்ற பேராசிரியா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களுக்கு பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் பேராசிரியா் ரா.சுப்பிரமணி, பதிவாளா் வை.ராஜ் மற்றும் தோ்வாணையா் கு. முருகேசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...