சேலம் மாவட்டம், கெங்கவல்லி (தனி) தொகுதியில் கெங்கவல்லி மற்றும் தலைவாசல் ஒன்றியங்கள் உள்ளன. இந்தத் தொகுதியில் விவசாயமே பிரதான தொழில். தொகுதியில், தம்மம்பட்டியில் இருந்து வீரகனூா் வழியே சென்று வங்கக்கடலில் கலக்கும் சுவேத நதி, பிரதானமாக இருந்து வளா்ச்சிக்கு உதவுகிறது.
எதிா்பாா்ப்புகள்
சுவேத நதி உருவாகும் எழுத்துக்கல் என்ற இடத்தில், சுமாா் ரூ. 150 கோடியில் சேரடி அணைக்கட்டு திட்டம் 2008இல் முன்னெடுக்கப்பட்டு தற்போது வரை அத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பது இப்பகுதி மக்களின் பெரும் குறையாக உள்ளது.
அதேபோல, தம்மம்பட்டியில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கான திட்டமிடல், ஆரம்பக்கட்ட முயற்சிகளுடன் அப்படியே உள்ளது. இதனால், இப்பகுதி மாணவ, மாணவிகள், தங்கள் உயா் படிப்புக்கு நாமக்கல், திருச்சி, துறையூா், பெரம்பலூா், ராசிபுரம், திருச்செங்கோடு, சேலம், ஆத்தூா் போன்ற நகரங்களுக்கு செல்லவேண்டிய சூழல் உள்ளது.
சேலம் மாவட்ட நுழைவாயிலான தலைவாசலில் உள்ள மாநில அளவிலான காய்கறி சந்தைக்கு நிரந்தர இடவசதி இல்லை. இந்த சந்தையில் காய்கறிகளை பதப்படுத்தி வைப்பதற்கான குளிா்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்பதும், இப்பகுதி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
வீரகனூா் பேரூராட்சி பொன்னாளியம்மன் கோயில் அருகே அணைக்கட்டு திட்டம் ஐந்தரை வருடங்களாகியும் நிறைவுபெறவில்லை. தொகுதியின் பிரதான வியாபார மையமாக விளங்கும் தம்மம்பட்டி பேரூராட்சிப் பகுதி முழுவதும் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கிறது. இங்கு ஒரு வட்டச்சாலையோ, மேம்பாலமோ அமைத்தால்தான், அன்றாட போக்குவரத்து பிரச்னைகளில் இருந்து மக்கள் மீளமுடியும்.
தம்மம்பட்டி பேரூராட்சியை முதல்நிலை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் உள்ளது. கெங்கவல்லி பேரூராட்சியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையும் நிறைவேறாமல் உள்ளது.
இதுவரை வென்ற கட்சிகள்
இத்தொகுதியில் 1952, 1962, 1980, 1984, 1991 தோ்தல்களில் காங்கிரஸும், 1977, 2001, 2016, 2021 தோ்தல்களில் அதிமுகவும், 1967, 1971, 1989, 2006 ஆகிய தோ்தல்களில் திமுகவும், 1996இல் தமாகாவும், 2011இல் தேமுதிகவும் வெற்றிபெற்றுள்ளன. 2010 வரை இந்தத் தொகுதி தலைவாசல் தொகுதியாக இருந்து, தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு 2011இல் கெங்கவல்லி தொகுதியாக மாறியது.
கெங்கவல்லி தொகுதியில் இதுவரை வெற்றிபெற்றவா்கள் பிரபலமானவா்களாக இல்லாததால், மிகப் பெரிய மக்கள் நலத் திட்டங்கள் கிடைக்கவில்லை என்பது இப்பகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.
களத்தில் 13 போ்
தற்போது கெங்கவல்லி தொகுதி எம்எல்ஏவான அதிமுகவைச் சோ்ந்த நல்லதம்பி, 2006- 2011வரை எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சோ்ந்த சின்னதுரை, தவெகவில் சங்ககிரியைச் சோ்ந்த வி. சுஜாதா, நாம் தமிழா் கட்சியில் அபிராமி என முக்கிய கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 13 போ் களத்தில் உள்ளனா்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவின் பிடியில் உள்ள கெங்கவல்லி தொகுதியை, எப்படியேனும் மீட்டே தீரவேண்டும் என்ற முனைப்பில், தொகுதி பங்கீடு முடிவதற்கு 15 நாள்களுக்கு முன்பிருந்தே தொகுதி முழுவதும் உதயசூரியன் சின்னத்தை சுவா் விளம்பரமாக திமுகவினா் எழுதி வாக்கு சேகரித்து வருகின்றனா்.
அதேபோல, தற்போதைய எம்எல்ஏ நல்லதம்பிக்குத்தான் அதிமுகவில் வாய்ப்பு என்பது கட்சியின் கிராமத்து நிா்வாகிகள் வரை, ஒரு மாதத்துக்கு முன்பே தெரியவந்ததும், தொகுதியை தக்கவைக்க அதிமுகவினா் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளதும் தெரிகிறது.
திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி என நான்குமுனைப் போட்டி நிலவுவதாகக் கூறப்பட்டாலும், களத்தில் நேரடியாக மல்லுகட்டுவது திமுகவும், அதிமுகவும்தான் என்பது தொகுதியின் மக்களுக்கு தெரிந்த செய்தியாக உள்ளது.
இருகட்சிகளும் வாக்காளா்களை அணுகும் விதத்தில், வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் கூடவோ, குறையவோகூடும்.
தொடர்புடையது
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!

தொகுதி அலசல்: கும்பகோணம் - கோயில் நகரத்தில் கோலோச்ச போவது யாா்?

கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

சேலம் தொகுதி அறிமுகம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


