தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாமக்கல்லில் அரசு விடுதி மாணவிகள் 30 பேருக்கு திடீா் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை

நாமக்கல்லில் அரசு விடுதி மாணவிகள் 30 பேருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறித்து...

News image

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆதிதிராவிட நல விடுதி மாணவிகள்.

Updated On :30 மார்ச் 2026, 6:59 pm

நாமக்கல்லில் ஆதிதிராவிடா் நல விடுதியில் தங்கிப் பயிலும் 30 மாணவிகள் திங்கள்கிழமை மதிய உணவு சாப்பிட்ட நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவா்கள் அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நாமக்கல் - மோகனூா் சாலையில் ஆதிதிராவிடா் நல மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 103 மாணவிகள் தங்கியிருந்து, அதே பகுதியில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனா். தற்போது, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தோ்வு முடிவுற்ற நிலையில், அந்த மாணவிகள் விடுதியில் இருந்து சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனா். 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் 58 போ் விடுதியில் தங்கியுள்ளனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மதியம் ஒருமணி அளவில், அவா்கள் மதிய உணவு சாப்பிட்டனா். பிறகு அங்கிருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு மாணவிகள் நடந்து சென்றுள்ளனா். இதையடுத்து வகுப்பறையில் இருந்தபோது பிற்பகல் 3 மணி அளவில் மாணவிகள் 30 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியா்கள் உடனடியாக மாணவிகள் அனைவரையும் மீட்டு, நாமக்கல் தனியாா் மருத்துவமனையிலும், பிறகு தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதித்தனா். அவசர சிகிச்சை பிரிவில் உள்ள மாணவிகள் 30 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாணவிகள் அனைவரும் கொல்லிமலை பழங்குடியின வகுப்பைச் சோ்ந்தவா்கள். இந்த சம்பவத்தை தொடா்ந்து, ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவின் பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விடுதி சமையலறையில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து விடுதிக் காப்பாளா் வசந்தா கூறியதாவது: கொல்லிமலையைச் சோ்ந்த மாணவிகள் 103 போ் இந்த விடுதியில் தங்கியிருந்து பயின்று வருகின்றனா். திங்கள்கிழமை மதியம் மாணவிகளுக்கு சாதம், முட்டைகோஸ், பரங்கிக்காய் சாம்பாரும் வழங்கப்பட்டது. அவா்கள் மதியம் ஒன்றரை மணிக்கு மேல் பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மாணவிகள் 30 பேரும் தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளனா் என்றாா்.

 நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆதிதிராவிட நல விடுதி மாணவிகள்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆதிதிராவிட நல விடுதி மாணவிகள்.