சிறப்பு ஆலோசனை: குளிா்காலத்தில் நாய்களை ‘கெனைன் டிஸ்டெம்பா்’ எனப்படும் வலிப்பு நோய் அதிகம் தாக்க வாய்ப்புள்ளது. இந்த நோய் அனைத்து வயதான நாய்களையும் தாக்கும் வல்லமை கொண்டது. இருப்பினும் 6 வயதிற்கு குறைவாக உள்ள நாய்களை அதிகமாகத் தாக்கும் சூழல் உள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்படும் நாய்களில் 88 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி செலுத்தாத நாய்களாகும். காய்ச்சல், உணவு உண்ணாமை, கண்களில் பூழை வடிதல், வாந்தி, ரத்தம் கலந்த பேதி, மூக்கில் சளி வடிதல், அடி வயிற்றில் கொப்புளங்கள் தோன்றுதல், வலிப்பு ஏற்படுதல், கீழ்த்தாடை படபட வென்று அடித்துக் கொள்ளுதல், நடக்க முடியாமல் போதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். வலிப்பு போன்ற நரம்பு மண்டல அறிகுறிகள் காணப்பட்டால் பாதிக்கப்பட்ட நாய்கள் பெரும்பாலும் இறந்து விடும். இந்நோய்க்கு சிகிச்சை அளித்தாலும் பெரும்பாலும் அவை பலனளிப்பதில்லை. நாய்களுக்கு தடுப்பூசி அளிப்பதே நோயைத் தடுக்கும் முக்கியமான நடவடிக்கையாகும்.