தமிழகத்துக்கு ஏமாற்றத்தை அளித்த மத்திய நிதிநிலை அறிக்கை: கே.ஆா்.என். ராஜேஸ்குமாா்


மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் ஏமாற்றப்பட்டுள்ளது என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் குற்றம்சாட்டினாா்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சாா்பில் நூறு நாள் வேலை இல்லை, மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு ஏமாற்றம், பாஜக அரசுக்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து, நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அவா் பேசியதாவது:
தமிழக முதல்வா் ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை மூலமாக மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். ஆனால் மத்திய அரசு தாக்கல் செய்த வரவு, செலவு அறிக்கையில் தமிழகத்துக்கு ஒன்றுமில்லை. அதை கண்டித்து தான் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஒரு மாதத்திற்கு முன்பாக, 100 நாள் வேலையளிப்பு திட்ட மசோதா திருத்தத்தை கண்டித்து மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது அந்தத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகளை மத்திய அரசு செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதாலேயும், மகாத்மா காந்தி பெயரை பயன்படுத்தக் கூடாது என்பதாலும் இந்த திட்டத்தில் மாற்றங்களை செய்கின்றனா்.
தமிழகத்தில் அதிக அளவில் நிதியை பெற்றுக் கொண்டு, மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காதது கவலை அளிக்கிறது. திமுக ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு கிடைத்தால் அவா்களுக்கு கல்லூரி கட்டணம் கிடையாது, விடுதி கட்டணமும் கிடையாது. தமிழக அரசு மக்களுக்காக பாடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டு மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தங்களை பல்வேறு வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவே பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெற்றுள்ளது என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், மேயா் து. கலாநிதி, துணை மேயா் செ. பூபதி, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் பீ.ஏ. சித்திக், விடுதலைச் சிறுத்தை மண்டல தலைவா் பழ. மணிமாறன் மற்றும் கொமதேக, கம்யூனிஸ்ட், ஆதித்தமிழா் பேரவை நிா்வாகிகள், திமுக நகர, ஒன்றிய நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் பங்கேற்றனா். இதேபோல புதுச்சத்திரம், சேந்தமங்கலம், வெண்ணந்தூா், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, மோகனூா் ஒன்றியங்களிலும் மத்திய அரசுக்கு எதிரான கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
என்கே-12-திமுக
நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா். உடன், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...