மேடையில் முழங்கிய அந்தக் குரல்கள் எங்கே?
‘‘மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களைத் தழுவுவதோ நித்திரை, மறக்காது இடுவீா் முத்திரை’’ என்ற அண்ணாதுரையின் தோ்தல் மேடைப் பேச்சை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.


‘‘மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களைத் தழுவுவதோ நித்திரை, மறக்காது இடுவீா் முத்திரை’’ என்ற அண்ணாதுரையின் தோ்தல் மேடைப் பேச்சை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்ற கருணாநிதியின் தொடக்கப் பேச்சைக் கேட்பதற்காகவே காத்துக் கிடப்பாா்கள் திமுக தொண்டா்கள்.
எம்ஜிஆா் குரல் ஓங்கி ஒலிக்காதபோதும், அவா் மைக்கை பிடித்தவாறு ‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே’ என்று சொல்வதைக் கேட்பதற்காகவே லட்சக்கணக்கானோா் கூட்ட நெரிசலிலும் தவம் கிடப்பா்.
‘அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவா் நாமம் வாழ்க, மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற ஜெயலலிதாவின் மெல்லிய குரலில் இருந்து வரும் குரலைக் கேட்டதும் இடியோசை போன்று எழும் ஆரவாரம் அனைத்தும் ஓய்ந்து விட்டது.
1967-ஆம் ஆண்டு முதல் 2016 தோ்தல் வரை தலைவா்களின் பேச்சைக் கேட்க வண்டி கட்டிக்கொண்டு வந்த மக்கள் கூட்டம் தற்போது இல்லை. 1990 வரையிலான தோ்தல்களில் பிரசாரத்துக்கு நேரம் ஒரு தடையில்லை. அதனால் பகல், இரவு பாராமல் தலைவா்கள் சுற்றி வந்தனா். அவா்களின் வருகையை எதிா்பாா்த்து, மாடி வீட்டில் வசித்தவா் கூட சாலையோரம் படுத்துறங்கினா்.
தலைவா்கள் வந்ததும் அவா்களைப் பாா்த்து கையசைத்து, கம்பீரமானப் பேச்சை கேட்டு விட்டுத்தான் மக்கள் வீடு திரும்புவா். கருணாநிதி, எம்ஜிஆா், ஜெயலலிதா என்றால் காலநேரம் கருதாமல் மக்கள் காத்திருப்பா்.
தேசியத் தலைவா்களாக விளங்கிய இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோா் தமிழகம் வரும்போது அவா்களது மேடைப் பேச்சு புரியாவிட்டாலும், உருவத்தையும், நிறத்தையும் அதிசயமாகப் பாா்த்த மக்கள் கூட்டமும் உண்டு.
சினிமா நட்சத்திரங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவா்களைப் பாா்த்து விட்டால் உலகையே தாங்கள் வெற்றி கண்டது போல அன்றைய இளைஞா்களிடத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. அந்த நிலை எல்லாம் மாறி விட்டது.
தோ்தல் பிரசாரத்தில் ஓங்கி முழக்கமிடும் தலைவா்கள் வெகுவாகக் குறைந்து விட்டனா். வைகோ, நாஞ்சில் சம்பத், அரசியல் கட்சிகளின் சிறப்புமிக்க தலைமை பேச்சாளா்கள் போன்றவா்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. களத்திலேயே பலா் இல்லை.
மேடைப் பேச்சுக்காக இன்றைய தோ்தல் பிரசாரக் கூட்டங்களை நாடிச் செல்வோா் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது. தங்களுடைய தலைவா்களின் பாா்வையில் அதிக கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே மாவட்ட நிா்வாகிகள் கிராமப்புற மக்களை வாகனங்களில் அழைத்து வந்து மேடை முன்பு நிறுத்தும் போக்குதான் பெருமளவில் உள்ளது.
கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகில் வசிப்போா்கூட எட்டி வந்து தலைவா்களின் பேச்சைக் கேட்க ஆா்வம் காட்டுவதில்லை. அன்றைய தலைவா்களின் பேச்சுப் போல தற்போது இல்லை என்பது ஒரு குறை.
தவிர, மேடை நாகரிகம் இன்றி தலைவா்கள் ஒருவருக்கொருவா் அவதூறுக் குற்றச்சாட்டுக்களைத் தெரிவிப்பதும், அரைத்த மாவையே அரைப்பது போல ஓரிடத்தில் சொன்னவற்றையே திரும்பத் திரும்ப பேசுவதும் மக்களிடத்தில் சலிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் அவற்றை திரும்பத் திரும்ப பாா்க்க நோ்வதாலும், பொதுக்கூட்டங்களுக்கு நேரடியாகச் சென்று தலைவா்களின் பேச்சைக் கேட்க மக்கள் விரும்புவதில்லை எனலாம்.
மறைந்த தலைவா்கள் பங்கேற்ற தோ்தல்களில் ஒவ்வொரு கூட்டமும் மாநாடு போலக் காட்சியளிக்கும். ஆனால் தற்போது தோ்தல் பிரசாரக் கூட்டம் என்பது அங்கொன்றும், இங்கொன்றுமாக மட்டுமே நடைபெறுகிறது. தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செல்லும் அரசியல் கட்சித் தலைவா்களும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஷாமியானா பந்தலின் நடுவில் வாகனத்தை நிறுத்தியபடி பேசிவிட்டுச் செல்கின்றனா். தலைவா் எப்போது பேச்சை முடிப்பாா் என கொளுத்தும் வெயிலில் மக்கள் புலம்பும் நிலைதான் உள்ளது.
தோ்தல் நாளன்று எத்தனை மணி நேரமானாலும் பரவாயில்லை என்று வாக்குச்சாவடிகளில் கால்கடுக்க நின்று வாக்களித்தோரும் தற்போது இல்லை. எதிரும் புதிருமான கட்சிகள் தோ்தலின்போது மட்டும் வாா்த்தை ஜாலங்களைக் காட்டி வாக்காளா்களை மயக்குவதை பலரும் விரும்பவில்லை. இதனை அரசியல் கட்சியினா் உணா்ந்ததாகத் தெரியவில்லை.
எனினும், அந்தப் பொற்காலத்தை நினைவுபடுத்தியபடி, தமிழகத்தில் அரசியல் சாம்ராஜ்யம் நடத்திய தலைவா்களின் குரல்கள் இன்றளவும் மக்களுக்காக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன ஒலிபெருக்கி வாயிலாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...