ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தீவன விலையேற்றம், முட்டை உற்பத்தி அதிகரிப்பு: கடும் நெருக்கடியில் கோழி‌ப் ப‌ண்​ணைத் தொழி‌ல்!

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தீவன விலையேற்றம், முட்டை உற்பத்தி அதிகரிப்புக்கு ஏற்ப போதிய விலை கிடைக்காதது

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:56 am

எம்.மாரியப்பன்

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தீவன விலையேற்றம், முட்டை உற்பத்தி அதிகரிப்புக்கு ஏற்ப போதிய விலை கிடைக்காதது உள்ளிட்டவற்றால், கோழிப் பண்ணைத் தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 
இந்த நிலையில்,  பண்ணையாளர்களை ஒருங்கிணைத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் வரும் வெள்ளிக்கிழமை அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
நாடு முழுவதும்,  அதிக கோழிப் பண்ணை உள்ள பகுதிகள் 23 மண்டலங்களாகப்  பிரிக்கப்பட்டுள்ளன.  அதற்கென உள்ள தேசிய ஒருங்கிணைப்புக் கமிட்டி தினசரி முட்டை விலையை நிர்ணயம் செய்கிறது.  இவற்றுள் நாமக்கல் மண்டலமும் ஒன்று.  இங்கு, மொத்தம் உள்ள 1,100 கோழிப் பண்ணைகளில் சுமார் 5 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினமும் 3.70 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.  உள்ளூர் மற்றும் பிற மாநிலங்கள்,  வெளிநாடுகள் உள்ளிட்டவற்றுக்கு முட்டைகள் அனுப்பப்படுகின்றன.
முட்டை உற்பத்தியில் கோலோச்சிய நாமக்கல் மண்டலம் தற்போது மிகவும் தடுமாற்றத்தில் உள்ளது.  இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது தீவனங்களின் விலையேற்றம்.
ஒரு முட்டை ரூ.3.50-க்கு விற்பனையாகிறது என்றால்,  அதற்குரிய தீவனச் செலவு ரூ.4.50-ஆகிறது.  கோழித் தீவனத்தைப் பொருத்தவரை,  மக்காச்சோளம்,  கோதுமை,  அரிசி குருணை உள்ளிட்டவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.  இவற்றில், கோதுமை, அரிசி குருணை எளிதாக பண்ணையாளர்களுக்குக் கிடைக்கின்றன.
ஆனால்,  மக்காச்சோளம் என்பது வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.  பிகார், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோழிப் பண்ணையாளர்கள் 15 ஆயிரம் டன் என்ற அளவில் வாங்கி வந்தனர்.  தற்போது, மக்காச் சோளத்தில் ஏற்பட்ட அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலால், அம் மாநிலங்களிலும் மக்காச்சோளம் பயிரிடுவது குறைந்து விட்டது.  15 ஆயிரம் டன் கொள்முதல் செய்த நிலையில்,  8 அல்லது 6 ஆயிரம் டன் அளவிலேயே கொள்முதல் செய்ய வேண்டியது உள்ளது.  மேலும்,  ஒரு டன்னுக்கு ரூ.800 வரை விலை உயர்ந்துள்ளது. 
இதனால், பண்ணையாளர்கள் கோழிக்கான தீவனத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்கு ஆளாகின்றனர்.  அதுமட்டுமின்றி,  சில பண்ணைகளில் குஞ்சுகள் விடும் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றனர்.  இதனால் கோழிக் கூண்டுகள் காலியாகக் கிடக்கின்றன. 
இப் பிரச்னை ஒருபுறமிருக்க,  முட்டை  உற்பத்தி அதிகரித்த நிலையில்,  அவற்றை விற்பனை செய்ய முடியாமல் பண்ணையாளர்கள் தவிக்கின்றனர்.  தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலைக்கும்,  வியாபாரிகள் நிர்ணயம் செய்யும் விலைக்கும் இடையே உற்பத்தி செய்த முட்டையை விற்கவும் முடியாமல்,  தேக்கி வைக்கவும் முடியாமல் தடுமாறி வருகின்றனர்.
உற்பத்தி அதிகரித்துள்ளதால்,  வியாபாரிகள் நிர்ணயம் செய்யும் விலை பண்ணையாளர்களுக்குக் கட்டுப்படியாகும் பட்சத்தில், அந்த விலைக்கு விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.  மேலும், அதே விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவானது அறிவிக்க வேண்டும்.  அவ்வாறு செய்வதால் தேவையற்ற பிரச்னைகள், நெருக்கடிகள் பண்ணையாளர்களுக்கு ஏற்படாது என்ற கருத்து நிலவுகிறது. 
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு,   தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம்,  தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம்,  நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் என தனித்தனியாகப் பிரிந்திருப்பதும்,  இணக்கமான சூழல் சங்கத்தினரிடையே இல்லாததும்,  நாமக்கல் மண்டலத்தில் கோழிப் பண்ணைத் தொழில்,  சரிவை நோக்கிச் செல்வதற்கு ஒரு  காரணமாகும் என்ற தகவலும் பண்ணையாளர்களிடையே உள்ளது.
கோழிப் பண்ணைத் தொழிலை நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க,  தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் வரும் வெள்ளிக்கிழமை (ஆக.30) அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.  இந்தக் கூட்டத்தில், முட்டை விலை,  விற்பனை,  கோழி விற்பனை, மூலப்பொருள்கள் கொள்முதல், பண்ணையாளர்களின் வங்கிக் கடன் பிரச்னைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
ஏற்கெனவே, வெளிநாடுகளில் இருந்து 4 லட்சம் டன் மக்காச்சோளம் இறக்குமதி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையிலும்,  மத்தியப் பிரதேசத்தில் இருந்து கோதுமை கொள்முதல் செய்ய இருப்பதாக நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவருமான ஏ.கே.பி.சின்ராஜ் தெரிவித்த நிலையில்,  அது தொடர்பான நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது எனவும் ஆலோசிக்கப்படுகிறது.
மேலும்,  முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக நிலவும் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில்,  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவர் மருத்துவர் பி.செல்வராஜை, அனைத்து கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் நேரில் சந்தித்து மனு அளிக்கவும் இந்தக் கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாக நாமக்கல் முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.