/

அழிந்துவரும் புராதனச் சின்னங்கள்: நாமக்கல் மலைக்கோட்டை பாரம்பரியம் பாதுகாக்கப்படுமா?

குடவறைக் கோயில்கள் அமைந்துள்ள நாமக்கல் மலைக்கோட்டையின் மேல் பகுதியில், குற்றச் செயல்கள்

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:51 am

எம்.மாரியப்பன்

குடவறைக் கோயில்கள் அமைந்துள்ள நாமக்கல் மலைக்கோட்டையின் மேல் பகுதியில், குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால்,  அதன் பாரம்பரியம் பாதிப்புக்குள்ளாவதுடன்,  அங்குள்ள புராதனச் சின்னங்களும் அழிந்து வருகின்றன.
நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள 246 அடி உயரம் கொண்ட மலைக்கோட்டை ஒரே பாறையால் ஆனது.  விஷ்ணுவுக்கு உகந்த தெய்வீக கல்லான சாளக்கிராமக் கல்லை, ஆஞ்சநேயர் எடுத்துச் சென்றபோது,  கமலாலயக் குளக்கரையில் இறக்கி வைத்துவிட்டு,  அதிகாலை நீராடியபோது,  அக் கல் மலையாக உருவெடுத்ததாகவும்,  அதில், நரசிம்மரும், நாமகிரித் தாயாரும் எழுந்தருளி, ஆஞ்சநேயருக்கு காட்சியளித்ததாகவும் வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.  அதன்பின்னரே சாளக்கிராமக் கல்,  நாமகிரியாக மருவி, பின்னர் நாமக்கல் என்ற பெயர் உருவானது.
மலைக்கோட்டை வரலாறு:  மலையில் குடவறைக் கோயில்களாக ஒருபுறம் நரசிம்மர் சன்னிதியும், மறுபுறம் அரங்கநாதர் சன்னிதியும், மேல் பகுதியில் வரதராஜப் பெருமாள் சன்னிதியும் உள்ளன.  மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக,  மேற்பகுதியில் மசூதி ஒன்றும் உள்ளது.   மலையில் இருந்து வெட்டப்பட்ட கற்களைக் கொண்டு, 16-ஆம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பாளையக்காரான ராமச்சந்திர நாயக்கர் கோட்டையாகக் கட்டினார் என்றும்,  திப்பு சுல்தான் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட இக் கோட்டையைப் பயன்படுத்திய வந்ததாகவும் கூறப்படுகிறது.
சிதிலமடையும் மதில் சுவர்கள்:  மலைக்கோட்டைக்கு அழகு சேர்க்கும் மதில் சுவர்கள்,   மர்ம நபர்களால் சுரண்டப்பட்டு,  அலங்கோலமாக்கப்பட்டு சிதிலமடைந்து காணப்படுவதுடன்,  பாரம்பரிய சின்னங்களும் அங்கு சேதப்படுத்தப்பட்டுள்ளன.  அவற்றை புனரமைக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த கோட்டையானது மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இதனால் பிற துறை அதிகாரிகள் மலைக்கோட்டையின் பாதுகாப்பில் எவ்வித  ஆர்வமும் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: 
சுற்றுலாத் தலமாக கருதப்படும் மலைக் கோட்டையின் மேல் பகுதியில்,  பணம்,  நகைகளைப் பறிக்கும் கும்பலின் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படுவதால், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல விரும்புவதில்லை.  பெண்களும் அங்கு செல்லத் தயங்குகின்றனர். காதல் ஜோடிகளும்,  கல்லூரி மாணவியரும், மர்ம நபர்களால் சொல்ல முடியாத பல தொல்லைகளுக்கு ஆளாகி வருவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது.  இரவு நேரங்களில் மலைக்கோட்டையில் விளக்கு வெளிச்சம் இல்லாததால்,  அங்கு நடக்கும் பல குற்றச் சம்பவங்கள் வெளியே தெரியாமல் போகிறது.
கண்காணிப்பு கேமரா பொருத்த தயக்கம்:  மத்திய தொல்லியல் துறையின்,  சேலம் மண்டல இளநிலை பராமரிப்பு அலுவலர் ஸ்ரீதர் கூறியது;  தமிழகம் முழுவதும் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் 411 இடங்கள் உள்ளன.  எங்களுடைய துறையில் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை இல்லை.  பாதுகாக்கப்பட வேண்டிய,  பராம்பரிய சின்னங்கள் அனைத்தும் எங்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளன.  சங்ககிரி மலைக்கோட்டையில் மேற்கொண்ட பாதுகாப்புபோல், நாமக்கல் மலைக்கோட்டையில் எங்களால் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
எங்களது ஊழியர் ஒருவர் மலைக்கோட்டையின் மேலே பணியில் இருக்கிறார்.  அங்கு நடக்கும் தவறுகளைக் கண்டித்தாலும், போதிய பாதுகாப்பு அவருக்கு இல்லை.  இது தொடர்பாக போலீஸாரிடம் முறையிட்டால்,   ஓரிரு நாள்கள் ரோந்து வருகின்றனர்.  அதன்பின் யாரும் வருவதில்லை.  அங்கு நடக்கும் குற்றச் சம்பவங்கள் குறித்த தகவல்கள் எங்கள் காதுக்கு வரத்தான் செய்கிறது.  தற்போது மேல் பகுதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அங்கு கண்காணிப்பு கேமராவைப் பொருத்த,  ஆஞ்சநேயர் கோயில் உதவி ஆணையர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால்,  கேமரா சேதப்படுத்தப்பட்டால் என்ன செய்ய முடியும் என்ற எதிர் கேள்வி தான் வருகிறது.
மலைக்கோட்டையைச் சுற்றிலும் வேலி அமைப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  ஆனால், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வரவில்லை.  நகராட்சி நிர்வாகம் ஒத்துழைத்தால் மலையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி வேலி அமைத்து விடுவோம். அரங்கநாதர் கோயிலில் போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.  கோயிலுக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரை சிலர் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனை நேரடியாகப் பார்த்து எச்சரித்தபின் யாரும் உள்ளே வருவதில்லை.
மலைக்கோட்டையின் பாரம்பரியத்தையும்,  பழமையான மதில் சுவர்களையும் பாதுகாக்க தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  மேலும், மணல் பரப்பாக உள்ள இடங்களில் கற்களைப் பதித்து வருகிறோம்.  அங்கு குற்றச் சம்பவங்களிலோ அல்லது அத்துமீறிய செயல்களிலோ ஈடுபடும் ஆணானாலும், பெண்ணானாலும் அவர்கள் மீது போலீஸார் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மலைக்கோட்டைக்கு பகல், இரவு நேரங்களில் நிரந்தர பாதுகாப்புக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.  அறநிலையத் துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  நரசிம்மர் கோயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள், மலைக்கோட்டையின் நுழைவுப் பகுதியிலும், மேற்புறத்திலும் கேமராக்கள் பொருத்த வேண்டும்.  நாமக்கல் மலைக்கோட்டையைப் பாதுகாக்க, மாவட்ட நிர்வாகமும் இதற்கான ஒத்துழைப்பை எங்கள் துறைக்கு வழங்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.