விவசாயம் பொய்த்துப்போனதால் நலிவடையும் மணப்பள்ளி அரிவாள் தயாரிப்புத் தொழில்
மோகனூரின் அடையாளமாக திகழும் மணப்பள்ளி அரிவாள் தயாரிப்புத் தொழில், விவசாயம் பொய்த்துப்போனதால் நலிவடைந்து


மோகனூரின் அடையாளமாக திகழும் மணப்பள்ளி அரிவாள் தயாரிப்புத் தொழில், விவசாயம் பொய்த்துப்போனதால் நலிவடைந்து வருகிறது. தொழில் நசிவால் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான பட்டறைகள் மூடப்பட்டு விட்டன.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அதன் சுற்றுவட்டாரம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது. காவிரி ஆறு விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்கி வருகிறது. வாழை, கரும்பு, வெற்றிலை போன்றவை பிரதான பயிர்களாகும். இவை நீங்கலாக மற்ற பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. விவசாயத்தைச் சார்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
அதேவேளையில் விவசாயம் சார்ந்து பல்வேறு தொழில்கள் மோகனூர் சுற்றுவட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், மோகனூர் அருகே மணப்பள்ளியில் அரிவாள் தயாரிப்பு தொழில் பிரசித்தி பெற்றது. அரிவாள் என்றால் உடன் நினைவுக்கு வருவது திருப்பாச்சி. அதேவேளையில் மோகனூர் மணப்பள்ளியில் தயாரிக்கப்படும் அரிவாள் விவசாயம் சார்ந்து மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
நேர்த்தியான வடிவமைப்புடன் தயார் செய்யப்படும் மணப்பள்ளி அரிவாள் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசித்தி பெற்றவை. கரணை அரிவாள், வாழை அரிவாள், கதிர் அரிவாள் என பல்வேறு வடிவங்களில் அரிவாள் தயார் செய்யப்படுகின்றன. அவ்வாறு தயார் செய்யப்படும் அரிவாள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
வேலையிழக்கும் தொழிலாளர்கள்: விற்பனைக்கு மட்டுமின்றி ஆர்டர் முறையிலும் அரிவாள் தயார் செய்து தரப்படுகிறது. இத்தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஆண்டுதோறும் விவசாயம் நலிவடைந்து வருகிறது. இதன்காரணமாக பலர் விவசாயத் தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழிலை நாடிச் செல்லத் துவங்கியுள்ளனர்.
இதன் எதிரொலியாக பல இடங்களில் விளைநிலங்கள் கான்கிரீட் கட்டடங்களாக உருமாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க விவசாயத் தொழில் நலிவு காரணமாக விவசாயம் சார்ந்த தொழில்கள் பலவும் நலிவடையத் துவங்கியுள்ளன. இந்த வரிசையில் மோகனூர் மணப்பள்ளி அரிவாள் தயாரிப்பு தொழிலும் நலிவடையும் அபாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தவிர, போதிய வேலையின்மையால் பலர் இத்தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்கு செல்லவும் துவங்கியுள்ளனர் என இத்தொழிலில் ஈடுபடுவோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மணப்பள்ளியைச் சேர்ந்த அரிவாள் தயாரிப்புப் பட்டறை உரிமையாளர் வி. பரமசிவம் தெரிவித்தது:
மோகனூர் மணப்பள்ளியில் பல தலைமுறைகளாக அரிவாள் தயாரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. மோகனூர் அருகில் உள்ள பரமத்திவேலூர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர், தொட்டியம் பகுதிகளில் கரும்பு, வாழை பிரதான பயிர்கள் என்பதால் அவற்றை அறுவடை செய்யப்படும் அரிவாள் இப்பகுதியில் அதிகம் தயார் செய்யப்படுகின்றன.
திருப்பாச்சி அரிவாள் விவசாய தேவைகளுக்கு பயன்படாது. ஆனால், விவசாயத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரிவாள் தயார் செய்வதால் பலரும் இங்கு வந்து அரிவாளை வாங்கிச் செல்வர்.
பணியாள்களைப் பொறுத்து அரிவாள் தயாரிப்பு எண்ணிக்கை அமையும். அதுபோல், அரிவாள் அதன் அளவுக்கு தகுந்தாற் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ. 500 முதல் அதன் அளவு, எடைக்கு தகுந்தாற் விலை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. நேர்த்தியான முறையில் அரிவாள் தயாரிக்கப்படுவதால் நாமக்கல், கரூர், திருச்சி, சேலம் மாவட்டங்களிலிருந்து அரிவாள் தயார் செய்ய அதிகளவில் ஆர்டர் கொடுக்கின்றனர்.
அரிவாள் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்கள் மோகனூர், நாமக்கல் சுற்றுவட்டாரத்திலேயே கொள்முதல் செய்யப்படுகின்றன. மூலப் பொருள்கள் கொள்முதல் உள்ளிட்டவற்றில் எவ்வித பிரச்னையும் இல்லை. எனினும், தொடர் வறட்சி உள்ளிட்ட காரணங்களினால், முன்புபோல் விவசாயத் தொழில் இல்லை. பல கிராமங்களில் நில உரிமையாளர்கள் விவசாயத்தைக் கைவிட்டு மாற்றுத் தொழிலை நாடிச் செல்கின்றனர்.
விவசாயம் பொய்த்துப்போனதால் தொழில் பாதிப்பு: இதனால் விவசாயம் நலிவடைவதுடன் அதைச்சார்ந்த பிற தொழில்களும் நலிவடைந்து வருகின்றன. குறிப்பாக இப்பகுதியில் அரிவாள் தயாரிப்புப் பட்டறைகள் ஏராளமாக இருந்தன. போதிய வேலையின்மை காரணமாக பலர் தொழிலை கைவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். குறிப்பிட்ட சிலர் மட்டுமே அரிவாள் தயாரிப்பு தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
இத்தொழில் சிறக்க விவசாயம் செழிப்பாக இருக்க வேண்டும். அதேவேளையில் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் அரிவாள் மட்டுமின்றி வேல், இறைச்சி வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அரிவாள் உள்ளிட்டவையும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
கோயில்களில் வேண்டுதலுக்காக வைக்கப்படும் அரிவாள், வேல் தயார் செய்து வழங்கப்படுகிறது. இயந்திரம் மூலம் அரிவாள் தயாரிக்க இயலும். இதற்கு இட வசதி மட்டுமின்றி முதலீடும் அதிகம் தேவை. இதற்கு வங்கிக் கடன் போன்வற்றை வழங்க அரசு முன்வந்தால் பயனாக இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...