எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வனத்தில் கட்டுப்பாடு இல்லாமல் கொட்டப்படும் குப்பைகள்: சூழல் பாதிப்பு அச்சத்தில் கொல்லிமலை

கொல்லிமலையில் உள்ள முக்கிய சுற்றுலா மையங்களில் குப்பைகள் முறையாக அகற்றப்படாததால்,  மலையின் இயற்கை வளம் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:51 pm

கே.விஜயபாஸ்கா்

கொல்லிமலையில் உள்ள முக்கிய சுற்றுலா மையங்களில் குப்பைகள் முறையாக அகற்றப்படாததால்,  மலையின் இயற்கை வளம் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. 
நாமக்கல் மாவட்டம்,  கொல்லிமலை கடல்மட்டத்திலிருந்து 1,400 மீட்டர் உயரத்தில் உள்ளது.   280 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட கொல்லிமலையில்,  வாழவந்தி நாடு, வளப்பூர் நாடு,  அரியூர் நாடு,  தின்னனூர் நாடு, குண்டூர் நாடு,  சேளூர் நாடு,  தேவனூர் நாடு,  ஆலந்தூர் நாடு, குண்டுனி நாடு,  திருப்புலி நாடு,  எடப்புலி நாடு,  சித்தூர் நாடு, பெரக்கரை நாடு மற்றும் பெயில் நாடு ஆகிய 14 ஊராட்சிகள் மற்றும் இந்த ஊராட்சிகளில் அடங்கிய 100-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. 
 தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள கொல்லிமலையில் அரப்பளீஸ்வரர் கோயில் மற்றும் அதன் அருகில் உள்ள 1,200 படிக்கட்டுகளுக்கு கீழே உள்ள ஆகாய கங்கை அருவி ஆகிய இரண்டும் முக்கியமான இடங்களாக உள்ளன.  வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 5,000 பேர் வந்து செல்கின்றனர்.  கோயிலின் இடதுபுறம் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.  இதில் பெரும்பாலானவை உணவகங்கள்.
இந்தக் கடைகளில் சேரும் கழிவுகள் அனைத்தும் கடைகளின் பின்பகுதியிலேயே கொட்டப்படுகின்றன.  குறிப்பாக,  சிற்றருவிக்குச் செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.  மேலும்,  படிக்கட்டுகளிலும் ஏராளமான கழிவுகள் சூழ்ந்து கிடக்கின்றன. இதனால் இப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.  மேலும், கழிவுகள் மரங்கள் சூழ்ந்த பகுதியில் எரிக்கப்படுவதால்,  பெருமழை பெய்தால் இந்த குப்பைக் கழிவுகள் மலைச்சரிவு வழியாக அடித்துச் செல்லப்பட்டு, சிற்றருவியில் உள்ள காட்டாற்றில் சேரும்.  இந்த ஆற்றுத் தண்ணீர் தான் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு வந்து சேருகிறது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நாமக்கல்லைச் சேர்ந்த ஆர்.சண்முகம் கூறியது:  கொல்லிமலையில் அரப்பளீஸ்வரர் கோயில் மற்றும் அதன் அருகில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி இரண்டும் முக்கிய சுற்றுலா இடங்கள்.  ஆனால்,  இந்த இடங்கள் பராமரிக்கப்படாததால்,  குப்பைகள் நிறைந்து சுற்றுச்சூழலுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல்,  கொல்லிமலையில் செம்மேடு,  சோளக்காடு பகுதிகளில் ஏராளமான உணவகங்கள், காட்டேஜ், ரிசார்ட்டுகள் உள்ளன.  இங்கு சேகரமாகும் குப்பைகள் சாலையோரம் உள்ள வனப் பகுதிகளில் கொட்டப்பட்டு வருவதால்,  சுற்றுசூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. 
 தற்போது கடும் வெயில் அடித்து வருவதால்,  காட்டுத் தீ ஏற்படும் அபாயம் நிலவுகிறது.  குப்பைகளை அகற்ற கட்டமைப்பு ஏதும் இல்லாததால்,  குப்பைகள் கண்ட இடத்திலும் கொட்டப்பட்டு வருகின்றன.   இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன்,  பெரும் தீ விபத்து உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார். 
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியது:  கோயில் பகுதியில் சேகரமாகும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு,  பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டு வருகின்றன.  மேலும்,  ஊராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மூலம் அவ்வப்போது கோயிலுக்கு வெளியில் சேரும் குப்பைகள் அப்புறப்படுத்தப்படுகின்றன என்றார். 
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியது:  கொல்லிமலையில் குப்பைகளை அகற்றும் பணியில் இதுவரை 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களைக் கொண்டு குப்பைகள் அகற்றப்பட்டு,  குப்பைக் குழிகளில் சேகரிக்கப்பட்டு,  மக்க வைக்கப்படுகின்றன.
சில மாதங்களாக 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.  இதனால் குப்பைகளை அகற்றுவதில் சில பிரச்னைகள் உள்ளன.  இருப்பினும்,  எங்கும் குப்பை அதிகம் சேராமல்,  அவ்வப்போது அகற்ற ஊராட்சிகள் மூலம் நடவடிக்கையெடுக்கப்படுகிறது. 
அரப்பளீஸ்வரர் கோயில் பகுதி இந்து சமய அறநிலையத் துறை,  வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்த துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டால், சிறப்பு ஏற்பாடாக துப்புரவுப் பணியாளர்களை அனுப்பி வைப்போம் என்றனர். 
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியது:  வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் குப்பைகளைக் கொட்டக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஊராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அவ்வப்போது குப்பைகளை அகற்றும் பணியைச் செய்து வருகிறோம்.  அரப்பளீஸ்வரர் கோயில் பகுதியில் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் குப்பைகள் கொட்டுபவர்களைக் கண்டறிந்து,  அபராதம் விதிக்க, மாவட்ட வன அலுவலரின் அனுமதியைப் பெற்று நடவடிக்கையெடுக்கப்படும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.