பராமரிப்பில்லாமல் பாழாகும்மகளிர் சுகாதார வளாகங்கள்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பத் திட்டமான ஒருங்கிணைந்த மகளிர், குழந்தைகள் சுகாதார வளாகத் திட்டம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.170 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு, புத்துயிர்


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பத் திட்டமான ஒருங்கிணைந்த மகளிர், குழந்தைகள் சுகாதார வளாகத் திட்டம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.170 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு, புத்துயிர் பெற்றது. இருப்பினும், பராமரிப்பதற்காக உரிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படாததால், பெரும்பாலான இடங்களில் சுகாதார வளாகங்கள் பயன்படுத்தப்படாமல் பூட்டிக் கிடக்கின்றன.
கிராமப்புறப் பெண்களின் பொது சுகாதாரம், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், மகளிர் சுகாதார வளாகங்கள் கட்ட முந்தைய 2001-06-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் 12,793 கிராம ஊராட்சிகளிலும் 750 சதுரடியில் ஒருங்கிணைந்த மகளிர், குழந்தைகள் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன.
ஒவ்வொரு வளாகமும் 14 கழிவறைகள், இரண்டு குளியலறைகள், மின்மோட்டாருடன் நீரேற்று அறை, தண்ணீர் தொட்டி, துணி துவைக்கும் கல் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தன. கழிவறைகளை ஒதுக்கீடு செய்ய உபயோகிப்பாளர்கள் கண்டறியப்பட்டு, குழுவாக அமைக்கப்பட்டனர். தண்ணீர் விநியோகம், விளக்குகளுக்கு ஆகும் மின் வசதியை, கிராம ஊராட்சிகள் செய்து கொடுத்து, சம்பந்தப்பட்ட குழுக்கள் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மகளிர் வசதிக்காக எரியூட்டிகளும் வளாகத்தில் அமைக்கப்பட்டன.
இதையடுத்து, 2006-11-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் போதுமான கவனிப்பு செலுத்தப்படாததால், பெரும்பாலான சுகாதார வளாகங்கள் பயன்பாடு, பராமரிப்பு இல்லாமல் போயின. மீண்டும் 2011-இல் அதிமுக ஆட்சி அமைந்ததும் பழுதடைந்த இந்த 12,793 வளாகங்கள் ரூ.170 கோடி செலவில் 2012-13 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டன. இந்த வளாகங்களை உடனுக்குடன் சீரமைக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, புனரமைக்கப்பட்ட சுகாதார வளாகங்களை முறையாகப் பயன்படுத்தவும், பராமரிக்கவும், ஒவ்வொரு வளாகத்துக்கும் பயன்படுத்துவோர் குழுவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், குக் கிராம அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே இருந்து, பயன்படுத்துவோர் குழுக்கள் அமைக்கப்பட்டன. பயன்படுத்துவோர் குழுவிலிருந்து ஒருவரை, வளாகத்தை நாள்தோறும் சுத்தப்படுத்த, தூய்மைப் பணியாளராக நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
சுகாதார வளாகங்களின் மின் கட்டணம், சிறு பராமரிப்புச் செலவுகளை, கிராம ஊராட்சிகள் அளித்தன. வளாகங்களைப் பராமரிப்பது மற்றும் உபயோகிப்பது ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
ஆனால், இந்த பயன்படுத்துவோர் குழுக்கள் சில மாதங்களிலேயே செயல்படாமல் போனதாலும், கடும் வறட்சி காரணமாக சுகாதார வளாகங்களில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு போனதாலும், பெரும்பாலான இடங்களில் சுகாதார வளாகங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.
கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த இல்லங்கள் தோறும் கழிவறை அமைக்க முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவறைகள் பயனற்றுக் கிடக்கின்றன. நிகழாண்டு பரவலாக மழை பெய்துள்ள நிலையில், பல கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால் முன்னர் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை சீரமைத்தோ அல்லது புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்தோ சுகாதார வளாகங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் சுகாதார வளாகங்களைப் பராமரிக்க உபயோகிப்பாளர் குழுக்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகளிர் சுகாதார வளாகத்தின் பராமரிப்பு விஷயத்தில் அரசு அக்கறை காட்டாவிட்டால் ரூ.170 கோடி செலவிட்டு புனரமைக்கப்பட்டதன் பலன் கிடைக்காத நிலை ஏற்படும். வளாக பராமரிப்புக்காக அமைக்க வேண்டிய குழுக்களை அமைப்பதிலும், சுகாதாரம் பேணுவதிலும், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது:-
தண்ணீர் பிரச்னையால்தான் பெரும்பாலான சுகாதார வளாகங்கள் மூடப்பட்டன. இப்போது மாவட்டம், ஒன்றியம், கிராமம் என்ற 3 அடுக்குகளில் வளாகத்தின் பராமரிப்பை உறுதிசெய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...