தீவனம் தட்டுப்பாட்டால் விலையில்லா பசுக்கள் வளர்ப்போர் தவிப்பு
தீவனத் தட்டுப்பாடு காரணமாக விலையில்லா கறவைப் பசுக்களுக்கு தேவையானத் தீவனங்களை அதிக விலை கொடுத்து வாங்க


தீவனத் தட்டுப்பாடு காரணமாக விலையில்லா கறவைப் பசுக்களுக்கு தேவையானத் தீவனங்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதற்கேற்ப பால் கொள்முதல் விலை கிடைக்காததால், விலையில்லா கறவைப் பசுக்கள் வளர்ப்போர் போதிய வருவாய் ஈட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
கிராமப்புறப் பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்திடும் நோக்கில் தமிழக அரசு விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.35,600 மதிப்பிலான கறவைப் பசு இலவசமாக அளிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 2011-12ஆம் ஆண்டில் 100 பேருக்கும், 2012-13ஆம் ஆண்டில் 100 பேருக்கும் கறவைப் பசுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. நிகழ் நிதியாண்டில் 100 பேருக்கு கறவைப் பசுக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 50 பேருக்கு வழங்கப்பட்டதுடன், தொடர்ந்து 50 பயனாளிகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தீவனங்கள் தட்டுப்பாடு காரணமாகவும், மேய்ச்சல் நிலங்கள் இல்லாததாலும் விலையில்லா கறவைப் பசுக்களுக்கு தேவையானத் தீவனங்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை அந்தப் பயனாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.13 முதல் ரூ.14 வரை மட்டுமே கிடைப்பதால், விலையில்லா பசுக்களால் போதிய வருமானம் ஈட்ட முடியாத நிலைமை நாமக்கல் மாவட்டப் பயனாளிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மன்டகாபாளையத்தைச் சேர்ந்த மாராயி என்ற பயனாளி கூறியது:
கடந்த 2 ஆண்டுகளுக்கு தமிழக அரசு வழங்கிய கறவை மாட்டின் மூலம் நாளொன்றுக்கு 3.5 லிட்டர் பால் பெற்று, குடும்பத் தேவை போக மீதம் கூட்டுறவுச் சங்கத்துக்கு அளிக்கப்படுகிறது. அங்கு பாலின் தரத்தை அளவிட்டு கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.13 அல்லது ரூ.14 மட்டுமே வழங்கப்படுகிறது. அதேசமயம், கறவை மாட்டுக்கு நாளொன்றுக்கு ரூ.80 வரை தீவனம் அளிக்க வேண்டியுள்ளதுடன், குடும்பத்தில் ஒரு நபர் வேறெந்த வேலைக்கும் செல்லாமல் பசுவை மட்டுமே பராமரிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், தனிநபர் வருமானம் இழக்க வேண்டியுள்ளது. தொடரும் இத்தகையப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு விலையில்லா கறவைப் பசுக்கள் வளர்க்கும் பயனாளிகளுக்கு அரசு மானிய விலையில் தேவையான அளவு தீவனங்கள் வழங்கிட வேண்டும் என்றார்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் கூறியது: வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் குறுகிய கால தீவன சோள விதைகள் 50 சத மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.6800 வீதம் நாமக்கல் மாவட்டத்தில் ஜூலை மாதம் முதல் இதுவரை 1488 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள அந்தத் தீவனப் பயிர்களில் பசுந்தீவனம் கிலோ ரூ.3 விலைக்கும், உலர் தீவனம் ரூ.15 விலைக்கும் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
கொள்முதல் செய்த தீவனப் பயிர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு 50 சத மானியத்தில் விற்பனை செய்யப்படவும் உள்ளன. இதில், விலையில்லா கறவைப் பசுக்கள் வளர்ப்போருக்கு முன்னுரிமை அளித்து தீவனப் பயிர்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர் அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...