அதிகரிக்கும் இளம் வயது திருமணங்கள்: சிறுமிகளின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம்
நாமக்கல் மாவட்டத்தில் இளம் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிறுமிகளின் எதிர்கால நலன்


நாமக்கல் மாவட்டத்தில் இளம் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிறுமிகளின் எதிர்கால நலன் கேள்விக்குறியாக உள்ளது. இத்தகைய இளம் வயது திருமணத்துக்கு சிறுமிகள் மீதான அக்கறை குறைவதும், மூட நம்பிக்கைகளுமே முக்கியக் காரணம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சட்டப்படி ஆணின் திருமண வயது 21. பெண்ணின் திருமண வயது 18 என்று அரசு சார்பில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அதற்குக் குறைந்த வயதில் திருமணம் நடந்தால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறப்பின் போது பிரச்னைகள் ஏற்படும். பிரசவத்தின் போது மரணமும் ஏற்படவும் வாய்ப்புள்ள நிலையில், இளம் வயது திருமணத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை மீறி சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்களும் தண்டிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் இளம் வயதுத் திருமணங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சைல்டு லைன் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன்படி, 2012 ஆகஸ்ட் முதல் 2013 அக்டோபர் வரை மட்டும் இந்த மாவட்டத்தில் 67 சிறுமிகளின் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. குறிப்பாக, நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 23 மாணவிகளின் திருமணங்கள் தடுக்கப்பட்டன. இவ்வாறு தடுக்கப்பட்ட 67 திருமணங்களில் 13 சம்பவங்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்தத் திருமணங்களால் பாதிக்கப்பட்ட 47 சிறுமிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, மீண்டும் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். 13 சிறுமிகளுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 7 சிறுமிகள் பள்ளிக்கும் செல்லாமல், வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாகவும் சைல்டு லைன் இயக்குநர் எஸ்.எல்.சத்தியநேசன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது: ஜாதியும், பொருளாதார பிரச்னைகளுமே இளம்வயதுத் திருமணங்களுக்கு காரணம் எனக் கருதப்படுகிறது. உண்மையில், இந்த இரு காரணங்களால், மிகக் குறைந்த அளவிலேயே இளம் வயதுத் திருமணங்கள் நடக்கின்றன. சிறுமிகள் மீதான அக்கறையின்மையும், மூட நம்பிக்கையுமே இத்தகைய திருமணங்களுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. பாலியல் ரீதியான வன்முறைகள் பெற்றோர்கள் மத்தியில் சிறுமிகள் மீதான அக்கறையைக் குறைத்து வருகிறது. இதனால், பெண் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணங்கள் மறைந்து, தற்போது பாதுகாப்பாகத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற சிந்தனைகள் மேலோங்கியுள்ளது.
அத்துடன், ஜாதகக் குறைபாடு, பெண் குழந்தைகள் இருந்தால் குடும்பத்துக்கு ஆகாது போன்ற மூட நம்பிக்கைகளும் கிராமப்புற மக்களிடையே அதிகளவில் உள்ளன. இதுவும் இளம்வயதுத் திருமணங்கள் பெருகக் காரணமாக உள்ளன என்றார் அவர்.
குழந்தைத் திருமணங்களைத் தடுக்க மாவட்ட சமூக நலத் துறை சார்பில் தொடர்ந்து வெளியிடப்படும் அறிவிப்புகளால் மட்டும் தடுக்க முடியாது என்பதற்காக, அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ஜெயலட்சுமி கூறியது:
இளம் வயதுத் திருமணம் என்பது சட்டப்படி குற்றம் என்பதை உணர்த்தவும், சிறுமிகள் திருமணங்கள் மற்றும் அவர்கள் மீதான வன்முறைகளை நடந்தால் 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கவும், இதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவிக்கோ அல்லது அவர்களது தோழிகளுக்கோ திருமணம் செய்யப்பட்டால், இந்த எண்ணுக்கு தகவல் தெரிவிப்பதன் மூலம் இளம் வயதுத் திருமணத்தைத் தடுக்க முடியும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...