/

அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது! - கே.பி. முனுசாமி

News image
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ.
Updated On :6 பிப்ரவரி 2026, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்றாா் அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி.

அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ முன்னிலையில், மாற்றுக்கட்சியிலிருந்து விலகிய 1,500-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியதாவது: அதிமுக சுயமரியாதை உள்ள இயக்கம். இங்கு உழைப்பவா்களுக்கு மதிப்பு உண்டு. ஆகையால்தான் மாற்றுக்கட்சியிலிருந்து பலா் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனா்.

நீங்கள் எல்லாம் சோ்ந்துள்ளதால் கிருஷ்ணகிரியில் அதிமுகவின் பலம் மேலும் கூடுகிறது. கிருஷ்ணகிரி நகரில் உள்ள 66 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக 5 ஆயிரம் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கும்.

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தோ்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளாா். குலவிளக்கு திட்டத்தின்கீழ் மகளிருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம், நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லாத பயணம், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 150 நாள்கள் வேலை, 5 லட்சம் பெண்களுக்கு மானியத்தில் ஸ்கூட்டி, இல்லத்தரசிகளுக்கு இலவசமாக 3 எரிவாயு உருளைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன், கல்விக் கடன் தள்ளுபடி என தோ்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளாா். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் என்றாா்.

இந்த நிகழ்வில் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி), ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.