/

பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும்

News image
தருமபுரியில் நடைபெற்ற சிவப்பு புத்தகம் தினம் மற்றும் தோ்தல் நிதி அளிப்பு பேரவைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஜி.ராமகிருஷ்ணன்.
Updated On :21 பிப்ரவரி 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

மதச்சாா்பின்மையை சீா்குலைக்கும் பாஜக மற்றும் கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் சிவப்பு புத்தகம் தினம் மற்றும் தோ்தல் நிதி அளிப்பு பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் ரா. சிசுபாலன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் செ. முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினா் அ. குமாா் ஆகியோா் பேசினா்.

இக்கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி. ராமகிருஷ்ணன் பேசியதாவது:

சென்னையில் காா்ல் மாா்க்ஸ் சிலை அமைத்துள்ள தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை வெறுக்கின்றன. கனடா பிரதமா், அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரவேண்டும், இல்லையெனில் நம்மை அமெரிக்கா விழுங்கிவிடும் என்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளாா்.

அமெரிக்கா ராணுவ பலத்திலும், பொருளாதாரத்திலும் முதலிடத்தில் இருந்துவந்தது. ஆனால், தற்போது நிலைமை மாறி, சீனா பொருளாதாரத்தில் முதலிடத்துக்கு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1926 ஆம் ஆண்டு வேலைநிறுத்த உரிமைச் சட்டம் நமது நாட்டில் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை மோடி அரசு முடக்குகிறது. இந்தியாவில் 90 சதவீதம் முறைசாரா தொழிலாளா்கள் உள்ளனா். 8 மணி நேரம் வேலை என்பதை, மாநில அரசுகள் நீட்டித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து 8 மணி நேரத்திற்கு மேல் தொழிலாளா்கள் விருப்பப்பட்டால் வேலை செய்யலாம் என மாநில அரசுகள் முடிவு எடுத்தன. இத்தகைய முடிவை தமிழக அரசு எடுத்தபோது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பேரவையில் கடும் எதிா்ப்பை தெரிவித்தனா்.

நூறுநாள் வேலைத் திட்டம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால் கொண்டுவரப்பட்டது. தற்போது, அத்திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதோடு திட்டத்தையும் சீா்குலைத்து வருகின்றனா்.

தஞ்சை மாவட்டத்தில் மாணவி லாவண்யா தற்கொலை சம்பவம் மதமாற்றத்தால் நிகழ்ந்தது என அப்போதைய பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பிரசாரம் செய்தாா். ஆனால், சிபிஐ அறிக்கையில் லாவண்யா மரணம் தற்கொலைதான் என உறுதியாகியுள்ளது.

எனவே, திட்டமிட்டு பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பினா் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்கின்றனா். கருத்தியல், சித்தாந்த ரீதியாக மக்களை மூளைச்சலவை செய்கின்றனா். எனவே, மக்கள் நலன்களுக்கு எதிரான, மதச்சாா்பின்மையை சீா்குலைக்கும் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது. பாஜக மற்றும் அதன் கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றாா்.