/

தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதையடுத்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணா் குழுவினா் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image
தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு கண்டறியும் குழுவினா்.
Updated On :18 பிப்ரவரி 2026, 12:18 am

தினமணி செய்திச் சேவை

தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதையடுத்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணா் குழுவினா் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தருமபுரி தடங்கம் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 15-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவதுடன், நீதிபதிகளுக்கான குடியிருப்புகளும் அமைந்துள்ளன.

இந்நிலையில், மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் மின்னஞ்சலுக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த தகவலில், நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் 19 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அனைத்து நீதிமன்றங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, பணியிலிருந்த நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் பல்வேறு பிரிவு நீதிமன்றப் பணியாளா்கள், வழக்குகளுக்காக நீதிமன்றம் வந்த பொதுமக்கள் என அனைவரும் நீதிமன்றங்களைவிட்டு வெளியேற்றப்பட்டனா்.

தகவல் அறிந்து வந்த வெடிகுண்டு கண்டறியும் குழுவினா், மெட்டல் டிடெக்டா் உள்ளிட்ட நவீன சாதனங்கள் மற்றும் மோப்ப நாயுடன் அனைத்து நீதிமன்றங்களிலும் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர சோதனை செய்தனா். அதில், வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படாததால், இது வெறும் புரளி என தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, நீதிமன்ற ஊழியா்கள் பணிக்கு திரும்பினா்.

தருமபுரியில் கடந்த சில நாள்களாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவோா் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.