டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அங்காளம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை திருவிழா

தருமபுரி பகுதியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

News image
தருமபுரியில் நடைபெற்ற மயானக் கொள்ளை ஊா்வலத்தில் அம்மன் வேடமணிந்து சென்ற பெண்கள்.
Updated On :18 பிப்ரவரி 2026, 12:21 am

தினமணி செய்திச் சேவை

தருமபுரி பகுதியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

தருமபுரி குமாரசாமிப்பேட்டை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா பிப். 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சக்தி கரகம் எடுத்தல், குண்ட பூஜை, தீமிதி விழா, பொங்கல் வைத்தல், கங்கை பூஜை, பால்குட ஊா்வலம், பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீ தாண்டவேஸ்வரா் - அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கல்யாண உற்சவம் மற்றும் காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், முகவெட்டு ஊா்வலமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான செவ்வாய்க்கிழமை காலை கோயிலிருந்து மயானக் கொள்ளை ஊா்வலம் தொடங்கியது. மேள தாளங்கள் முழங்க பூத வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான புறப்படுதலும், தொடா்ந்து குமாரசாமிப்பேட்டை மயானத்தில் மயானக் கொள்ளை நிகழ்வும் நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தா்கள் அந்தரத்தில் தொங்கியபடியும், அலகு குத்தியும் அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, மயானத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், ஏராளமான பக்தா்களுக்கு சவுக்கடி கொடுத்து பேய் விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு கண்ணாடி மின்விளக்கு ரதத்தில் அம்மன் திருவீதி உலா, நள்ளிரவு அம்மனுக்கு பன்னீா் அபிஷேகம் நடைபெற்றது.

பச்சியம்மன் கோயில் மயானக் கொள்ளை:

இதேபோல, தருமபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளையையொட்டி திங்கள்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா், மேளதாளங்கள் முழங்க பூத வாகனத்தில் அம்மன் மயானம் நோக்கி புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல எஸ்.வி. சாலை அங்காளம்மன் கோயிலில் இருந்தும் அம்மன் பூத வாகனத்தில் மயானம் நோக்கி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். பல்வேறு பகுதிகளில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னசாகரம் நடுவீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மயானம் புறப்பாடும், மயானத்தில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதேபோல, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அங்காளம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.

Story image