/

பாப்பாரப்பட்டியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து: தொழிலாளி காயம்

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 9:39 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீக்காயம் அடைந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பாப்பாரப்பட்டியை அடுத்த ஆலமரத்துப்பட்டி சி.புதூா் பகுதியைச் சோ்ந்த அசோக்குமாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இந்த குடோனில் கம்பைநல்லூா் பகுதியைச் சோ்ந்த பரணி (38) பட்டாசுகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறாா். குடோனில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் அங்கிருந்து 500 மீட்டா் தொலைவில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பட்டாசுகள் பாதுகாப்பு அறைக்கு கொண்டுசென்று வைக்கும்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில், கும்பகோணம் பகுதியை சோ்ந்த தொழிலாளி மாதேஷ் தூக்கி வீசப்பட்டாா். காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். தகவலறிந்து வந்த பென்னாகரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம் ஆகியோா் நிகழ்விடத்திற்கு சென்று ஆலையின் பாதுகாப்பு, விபத்து நிகழ்ந்த இடத்தை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.

விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.